பஞ்சாயத்துக்கு வந்த பஞ்சாயத்து நடிகையின் வாழ்க்கை!

 


Lakshmi-Ramakrishnanஊரில் உள்ள பிரச்னைகளுக்கெல்லாம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பஞ்சாயத்துப் பேசும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தன் வாழ்க்கையிலும் அதற்கான சூழல் வரும் என கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். லட்சுமியும், பொற்காலம் படத்தின் தயாரிப்பாளரும், குணசித்ர நடிகருமான ஜெயப்பிரகாஷ் இருவரும் இணைந்து வாழ்கிறார்கள் என்பது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கிசுகிசு.

இரண்டு, மூன்று படங்களில் சேர்ந்து நடிக்கும் ஹீரோ – ஹீரோயினை இணைத்துத்தான் பொதுவாகவே கிசுகிசுக்கள் கிளம்பும். ஆனால், துணை நடிகர் – நடிகைகள் எப்போதாவது அரிதினும் அரிதாகத்தான் இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டுவார்கள். அப்படித்தான் லட்சுமியும், ஜெயப்பிரகாஷும் தற்போது சிக்கியுள்ளனர்.
‘நான் மகான் அல்ல’ படத்தில் தான் இருவரும் முதன்முதலாக இணைந்து கார்த்தியின் அப்பா – அம்மாவாக நடித்தனர். அந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்துப்போக, அதன்பிறகு சில படங்களிலும் அவர்கள் சேர்ந்து நடித்தனர். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஆரோகணம்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயப்பிரகாஷ்.

சூப்பர் ‘அப்பா – அம்மா’ ஜோடி என கோடம்பாக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில்தான் இந்த கிசுகிசு பரவியுள்ளது. இதுகுறித்து லட்சுமியிடம் பேசினோம். “ஜெயப்பிரகாஷ் என்னோட சக நடிகர். எனக்கு அவர் நல்ல நண்பர், அவ்வளவுதான். நான் இயக்குன படத்துல கூட நல்ல ரோல்ல நடிச்சிருக்கார். ரெண்டு பேருக்குமே தனித்தனியா குடும்பம் இருக்கு. என் பொண்ணோட கல்யாண வேலையில நான் பிஸியா இருக்கேன். என் வேலையைப் பார்க்கவே எனக்கு டைம் இல்லை. திருமணத்துக்குப் பிறகு கம்பானியன்ஷிப் தேடிக்கிற நிலையில நான் இல்லை. 3 பிள்ளைகள், கணவர்னு கட்டுப்பாடான குடும்பமா, மதிப்புமிக்க குடும்பமா வாழ்ந்துகிட்டு இருக்கேன்.

எந்த தொழில் பண்ணாலும் தன்மானத்தோட பண்ணணும்னு நினைக்கிறவ நான். 50 வயசுல என்னங்க லவ்? பி.பி. இருக்கானு செக் பண்ணணும், பசங்க, குடும்பத்தைப் பார்க்கணும். யாருக்கு டைம் இருக்கு? 25 வயசுனா கூட ஓ.கே. ஏதாவது யோசிக்கலாம். மூணு, நாலு மாசத்துக்கு ஒருமுறை தான் ஜெயப்பிரகாஷ்னு ஒரு கேரக்டர் இருக்குறதே எனக்கு ஞாபகத்துக்கு வரும். நாங்க போன்ல கூட பேசிக்கிறது கிடையாது. அவரப் பத்தி யோசிக்கிறதுக்கு எனக்கு நேரமே கிடையாது. எதனால இப்படிச் சொல்றாங்கனு எனக்குத் தெரியல. நானும், அவரும் ஒன்னா வெளிய போறத பார்த்தாங்களா? போன்ல பேசுறத பார்த்தாங்களா? எப்படி இதுமாதிரி ஒரு விஷயம் வெளிய வந்துச்சுனே தெரியல. ஏதாவது ஒரு ரீஸன் அப்படி இருந்தாலும் பரவா இல்லை. அதுக்கு கூட இங்க வாய்ப்பு இல்லை.


எனக்கு மூணு பெண் குழந்தைங்க இருக்காங்க. எங்க வீட்டுல எதுவுமே சீக்ரெட் கிடையாது. என் செல்போனை யார்னாலும் எடுத்து யூஸ் பண்ணுவாங்க. என்னோட ஃபேஸ்புக் பாஸ்வேர்டு எல்லாருக்கும் தெரியும். நான் மூச்சுவிட்டாக்கூட என் கணவருக்கும், பொண்ணுங்களுக்கும் தெரியும். சினிமாத்துறையில இருக்குற நெகட்டிவ் விஷயங்களை தூக்கிப்போட்டுட்டு சாதிக்கணும்னுதான் உள்ள வந்தேன். இதுக்கெல்லாம் பயந்துகிட்டு வெளிய ஓடிட மாட்டேன். இன்னும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் ஜெயப்பிரகாஷ் என்ற அற்புதமான நடிகருடன் சேர்ந்து நடிக்கத் தயார்” என உறுதியோடு முடித்தார் லட்சுமி.

லட்சுமியின் கணவர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம். “இந்த வதந்திய யார் வேணும்னாலும் உருவாக்குனதா இருக்கட்டும். அதப் பத்தி எனக்குக் கவலை இல்லை. என் மனைவியை நினைச்சா எனக்குப் பெருமிதமா இருக்கு. எங்க குழந்தைகளுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமா லட்சுமி. அவங்க மாதிரி திறந்த புத்தகமா இந்த உலகத்துலேயே யாரும் கிடையாது. ரொம்ப தைரியசாலி, சிறந்த துணை. அவங்க எனக்கு மனைவி கிடையாது, அருமையான தோழி. அதனால இந்த செய்தியைப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை” என்றார்.

இதுகுறித்து ஜெயப்பிரகாஷ் என்ன சொல்கிறார்? “நான் ஃபேஸ்புக், டிவிட்டர்ல இல்லாததுனால இந்த விஷயம் பத்தி ஆரம்பத்துல எனக்குத் தெரியல. லட்சுமிதான் போன் பண்ணி, ‘இதுமாதிரி வந்துருக்கு. இதுக்கு நான் பதில் சொல்லியே ஆகணும். இல்லைன்னா, நான் பண்ற டி.வி. ஷோவைப் பாதிக்கும்’னு சொன்னாங்க. எப்பவுமே நான் யாருக்கும் அட்வைஸ் பண்ண மாட்டேன். அதனால அவங்க என்கிட்ட சொன்னப்ப ஓ.கே. சொன்னேன். யாரு இந்த வதந்திய பரப்புனாங்கனு தெரியல. ரெண்டு பேரோட குழந்தைங்களும் வளர்ந்துட்டாங்க. லட்சுமி என்னோட வெரிகுட் ப்ரெண்ட். போல்டா பேசுறவங்க. அவங்க குடும்பத்தைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். லட்சுமியோட குழந்தைங்க மூணு பேருமே புத்திசாலி. என் மனைவி சினிமாவுல இல்லைனாலும் லட்சுமிகிட்ட போன்ல பேசியிருக்காங்க. அதனால இந்த தகவலை கேள்விப்பட்டு என் மனைவிதான் கொஞ்சம் சங்கடப்பட்டாங்க’ என்றார்.