நடிகை ஸ்ரேயா சிறப்பு பேட்டி

‘‘எனக்கு 20 உனக்கு 18’’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து ஜெயம் ரவியின் மழை படம் மூலம் பிரபலமான ஸ்ரேயா, அதன்பின் ரஜினியுடன், சிவாஜி படத்தில் ஜோடி போட்டு கோலிவுட்டையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தனுஷ், ஆர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்ட் வந்தார். தென்னிந்திய படங்களில் மட்டுமின்றி இந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் கால் பதித்து இருக்கிறார் ஸ்ரேயா. தற்போது தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகி வரும் சந்திரா என்ற படத்தில் ராஜகுமாரியாக நடித்து வரும் ஸ்ரேயா இப்படத்தில் வாளை எடுத்து சுழற்றி சண்டையும் போட்டுள்ளார். இதோ அவர் அளித்த சிறப்பு பேட்டி…

சினிமாவுக்கு வந்து, 13 ஆண்டுகள் ஆகி விட்டன; எப்படி உணர்கிறீர்கள்?

நான், மிடில் கிளாஸ் பேமிலியில் இருந்து, சினிமாவுக்கு வந்த பொண்ணு. என்னை, ஒரு நடிகையாக அங்கீகரித்த மக்களுக்கு, இந்த நேரத்தில் நன்றி கூற வேண்டும். சினிமாவுக்கு வந்த புதிதில், எனக்கு அதைப் பற்றி, எதுவும் தெரியாது. இப்போது, ஓரளவுக்கு கற்றுக் கொண்டிருக்கிறேன். மரி¬யாதை, பணிவு போன்ற பல விஷயங்களை, சினிமாவிலிருந்து தான்,கற்றுக் கொண்டேன். முன்பு, கேமராவுக்கு முன் நிற்கும்போது, படபடப்பாக இருக்கும். இப்போது, ரொம்பவும் ரிலாக்சாக இருக்கிறேன்.

உங்க அம்மா, கல்லூரி பேராசிரியையாமே? சினிமாவுக்கு வராவிட்டால், டீச்சர் வேலை பார்த்திருப்பீர்களோ?

அதற்கு சான்சே இல்லை. என் தாயார், வேதியியல் பேராசிரியை. ஆனால், எனக்கு டீச்சர் வேலையில் ஆர்வம் இல்லை. இயற்கையாகவே, எனக்கு, பாரம்பரியமான நடனங்கள் மீது, ஆர்வம் அதிகம். ஓரளவு, அவற்றை தெரிந்து வைத்திருக்கிறேன். அதனால், சினிமாவுக்கு வந்திருக்காவிட்டால், கதக் நடன கலைஞராக ஆகியிருப்பேன்.

கோலிவுட்டிலிருந்து அடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்களே?

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறேன். ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை, நல்ல கதை கிடைத்தால், தமிழில் இப்போது கூட, நடிக்க ரெடி. கதைக்கும், என் கேரக்டருக்கும் தான், முக்கியத்துவம் தருகிறேனே தவிர, அதிகமான படங்களில் நடிக்க வேண்டும், பெரிய பேனர்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

தீபா மேத்தா, ரூபா அய்யர் போன்ற, பெண் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றுவது, உங்களுக்கு வசதியாக இருக்கிறதா?

உண்மை தான். பெண் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றும்போது, வசதியாகத் தான் இருக்கிறது. அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை, நன்கு புரிந்து கொள்ள முடியும். அதற்கு தகுந்தாற்போல், நாமும் நடிக்க முடியும். பாலிவுட்டில், டைரக்சன் மட்டுமல்லாமல், மற்ற துறைகளிலும், பெண் தொழில்நுட்ப கலைஞர்கள், அதிக அளவில் உள்ளனர். இங்கும், அந்த நிலை வர வேண்டும்.

உடம்பை, ரொம்பவும் ஸ்லிம்மாக வைத்துள்ளீர்களே? உணவு விஷயத்தில் பயங்கர கட்டுப்பாட்டை பின்பற்றுகிறீர்களா?

அய்யய்யோ, எப்பவுமே, நான் வயிற்றுக்கு வஞ்சகம் செய்வது இல்லை. இப்ப கூட பாருங்களேன். என், டைனிங் டேபிளில், முட்டை, தோசை, இளநீர், சாண்ட்விட்ச் என, ஒரு நடமாடும் ஓட்டலே உள்ளது. வயிறு முட்ட சாப்பிடுவேன். அதேநேரத்தில், கடுமையான உடற்பயிற்சிகள் செய்வேன். எந்த அளவுக்கு சாப்பிடுகிறேனோ, அந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்வேன்.இதுதவிர, நீச்சல், யோகாவும் உண்டு.