இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குமார் சங்கக்காரவிற்கும், கிரிக்கெட் சபைக்குமிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் அமைதியாகத் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இலங்கையின் டுவென்டி டுவென்டி சம்பியன்களாகத் தெரிவான கந்துரட்ட அணி சார்பாக முக்கிய பங்கை வகித்திருந்த குமார் சங்கக்கார, இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் சண் றைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக ஒப்பந்தம் செய்துள்ளார். இவ்விரு அணிகளும் சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடருக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில் இவற்றில் எந்த அணியில் குமார் சங்கக்கார பங்குபற்றுவார் என்ற குழப்பம் காணப்பட்டது.
இந்நிலையிலேயே அவர் கந்துரட்ட அணி சார்பாக விளையாடும் தனது முடிவை எடுத்ததோடு, இந்த விடயத்தில் இலங்கை கிரிக்கெட் சபை தவறான முறையில் செயற்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்கவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, உயர்நிலை ஊழியர்களாகக் காணப்படுபவர்கள் இந்த விடயம் குறித்து வெளியிட்ட அறிக்கைகள் குறித்து தான் மிகவும் பாதிக்கப்பட்டதாகத் சங்கக்கார தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தை அவர்கள் நாட்டுப் பற்றுக்கும். பணத்திற்குமிடையிலான தெரிவாகச் சித்தரித்திருந்ததாகத் தெரிவிதிருந்ததோடு, குறித்த கருத்துக்கள் தன்னைப் பிழையானவனாகக் காட்டியதாகக் குறிப்பிட்ட குமார் சங்கக்கார, சில தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் தன்னை ஒதுக்கும் விதமாகக் காணப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
குமார் சங்கக்காரவின் இக்கருத்துக்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஜெயந்த தர்மதாச தனது கண்டனங்களைத் தெரிவித்ததோடு, இது தொடர்பாக குமார் சங்கக்காரவைக் கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்.
இந்நிலையில் குமார் சங்கக்கார, ஜெயந்த தர்மதாச, இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆகியோர் திறந்த கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை, அதன் போது இச்சம்பவம் தொடர்பான சமரசமொன்று ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.