மக்களுக்கான சேவைக்கு சிறந்த ஆற்றலும் ஆளுமையும் முக்கியத்துவமானவை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களாலும், சிறந்த ஆற்றல் கொண்டவர்களாலும் மட்டுமே மக்களுக்கான சேவைகளை சிறப்பாக ஆற்ற முடியும் அந்த தகுதி எமக்கு மட்டுமே இருக்கிறது என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். கரவெட்டி பிரதேச செயலர் பிரிவின் கீழான கிராமங்களில் இன்றைய தினம் இடம்பெற்ற பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பகுதி மக்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வினை பெறுவதற்கும், மக்களது வாழ்வாதாரத்தை பலப்படுத்துவதற்கும் நிச்சயமாக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் அதேவேளை, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். மாகாணசபை என்பது எனது நீண்டகால கனவு எனக் குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக கிடைக்கப் பெற்ற மாகாணசபை முறையை நாம் ஆதரித்த போது அதனை எதிர்த்தவர்கள் இன்று அதற்காக போட்டியிடுகின்றனர். எமது மக்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மாகாணசபை அதிகாரமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அந்த அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கும் பட்சத்தில் மக்களுக்கான அரசியல் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் நிச்சயமாக நாம் வென்றெடுப்போம். குறிப்பாக குடிநீர், மலசலகூடவசதி, மின்சாரம், உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தும் அதேவேளை, வடமாகாணத்தை செல்வங்கொழிக்கின்ற பூமியாக மாற்றியமைப்போம் என்றும் தெரிவித்தார். அத்துடன், மண்டான் சனசமூக நிலையத்திற்கு 50 கதிரைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, மின்னிணைப்பும் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் உறுதிமொழி வழங்கினார். இதனிடையே ஒவ்வொரு கிராமங்களினதும் தேவைகள் தொடர்பாக துறைசார்ந்தோருடன் கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றில் முன்னுரிமையடிப்படையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார். இதில் ஈ.பி.டி.பியின் சார்பில் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிடும் வேட்பாளரான சுந்தரம் டிவகலாலா உரையாற்றும் போது தமிழ்மக்களுக்கான அரசியலை தீர்க்க தரிசனத்துடன் தீர்மானித்து அதனை இற்றை வரை நடைமுறைப்படுத்தி வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் இணக்க அரசியல் ஊடாகவே எமது பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியுமென்பதை வலியுறுத்தி அதில் வெற்றி கண்டுவருகின்றார் என்றும் சுட்டிக்காட்டினார். இதன்போது ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா, வேட்பாளர் சிறிரங்கேஸ்வரன் ஆகியோரும் உரைநிகழ்த்தியிருந்தனர்.