வடமாகாண சபை என்பது எமது மக்களுக்கான சர்வரோக நிவாரணி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


வடமாகாண சபை என்பது எமது மக்களுக்கான சர்வரோக நிவாரணி என்றும் அதனூடாக எமது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியுமென்றும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் (7) இடம்பெற்ற ஐ.ம.சு.முன்னிணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை முறையென்பது என்னுடைய 25 வருடகால கனவாகவுள்ளது. இதனூடாக எமது மக்களுக்கான அரசியல் உள்ளிட்ட உரிமைகளுக்கு தீர்வு காணமுடியும். இதுவொரு சர்வரோக நிவாரணி என்பது மட்டுமல்லாது இதன்மூலம் எமது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யவும் முடியும். ஆனால், மாகாணசபை முறையை நாம் ஏற்றுக் கொண்ட போது எம்மை துரோகிகள் என்று கூறி எதிர்த்தவர்கள் இன்று அதே மாகாண சபை முறைக்காக போட்டியிடுகின்றார்கள். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவ்விடயத்தில் மனம்திருந்தி விட்டார்கள் என்று கூறினால் நான் அதை ஒருபோதும் நம்பத்தயாராகவில்லை. இந்த நல்லசந்தர்ப்பத்தை வாய்ப்பை எமக்கு கிடைக்கவிடாமல் செய்வதே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் பிரதான நோக்கமாகவுள்ளது. இந்நிலையில் மக்களை தூண்டியும் உசுப்பேற்றியும், ஏமாற்றியும் வாக்குகளை அபகரிப்பதே அவர்களது நோக்கமாகவுள்ளது. நாம் வடமாகாண சபையை வென்றெடுப்பதன் ஊடாக மூன்று தொடக்கம் ஐந்து வருடங்களுக்குள் வளம் நிறைந்த பகுதியாக மாற்றியமைப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.