'கிளைமோர்' வைத்திருந்த புலி உறுப்பினருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

மஹரகம பகுதியில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டொன்றை வைத்திருந்தார் என்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவருக்கு 10 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் 'இம்ரான் பாண்டியன்' குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன கடூழிய சிறைத்தண்டனையை நேற்று புதன்கிழமை விதித்துள்ளார். சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா தண்டமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட ஊர்காவற்றுறையைச் சேர்ந்த மரியதாஸ் இராஜேந்திரன் (வயது 34 ) என்பவருக்கே கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் மஹரகம பகுதியில் சுமார் ஒன்றரை கிலோகிராம் நிறைகொண்ட கிளைமோர் மற்றும் தூர இருந்து இயக்கும் கருவிகள் இரண்டை தம்வசம் வைத்திருந்தார் என்றே சந்தேகநபர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. புலிகள் அமைப்பில் 'இம்ரான் பாண்டியன்' குழுவில் இணைந்து கொண்ட அவர் கொழும்பு துறைமுகம் தொடர்பிலான தகவல்களை திரட்டுவதற்காகவே கொழும்புக்கு வருகை தந்துள்ளார் என்று பொலிஸாரினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவ்விரண்டு குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டதையடுத்தே ஒரு குற்றச்சாட்டுக்கு தலா 5 வருடங்கள் என்ற அடிப்படையில் 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்