விஸ்வரூபம் 2 வுக்கும் கிளம்பும் சர்ச்சைகள்



கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் விஸ்வரூபம். இந்த படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சொல்லி அப்படத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் தடை கோரின. அதையடுத்து தமிழக அரசு தலையிட்டு படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததோடு, சில காட்சிகளை கத்தரித்து வெளியிட அனுமதி கோரியது.

அதேபோல், இப்போது கமல் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் -2 படத்திலும் முஸ்லீம்களின் மனதை புண்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், கமல் தொடர்ந்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லீம்களை காயப்படுத்தி வருகிறார் என்றும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும், டாம் 999, மெட்ராஸ் கபே போன்ற படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன என்பதை படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு, விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாமல், சமூக ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் படத்தை எடுத்து, ஏற்கனவே காயம்பட்டுள்ள முஸ்லீம்களின் காயத்துக்கு இந்த முறை கமல் மருந்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில், பின்லேடன் கெட்டப்பில் கமல் நடித்திருப்பது போன்ற போட்டோக்கள் இணையதளங்களில் வெளியான பிறகே இதுபோன்ற எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.