சென்னை : நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து விஜய்க்கு தொழில் ரீதியாக கொடுக்கப்பட்டு வரும் பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவருக்கு அனைத்து வழிகளிலும் உதவ தான் தயாராக இருப்பதாக அப்போது ஜெயலலிதா உறுதியளித்தார்.
மேலும், பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சியைத் தொடங்கவிருப்பதாகவும் அவர் ஜெயலலிதாவிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். புதிய கட்சி தொடங்கும்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என விஜய் ரசிகர் மன்றத்தினர் விஜய்யை வலியுறுத்தியுள்ளனர். இதை விஜய்யும் ஏற்றுக் கொண்டு விட்டார்.
இதையடுத்து அவர் ஜெயலலிதாவை சந்திக்கலாம் என்று இரண்டுமுறை எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் விஜய்யோ அல்லது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ வரவில்லை.
இந்த நிலையில் விஜய்க்கு குறிப்பிட்ட தரப்பிலிருந்து நெருக்கடிகள் அதிகமாகியுள்ளன. ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் படத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட முக்கியப் புள்ளி கொடுத்த நெருக்கடியை ஏற்று விஜய்யை நீக்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படத்துக்காக இயக்குநர் ஷங்கர் கூறியபடி தலைமுடியை ஒட்ட வெட்டி படப்பிடிப்புக்காக ஆவலுடன் காத்திருந்த விஜய்க்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இது போதாதென்று அவரது எதிர் வரும் படங்களை பெருமளவில் சிக்கலுக்குள்ளாக்கும் வேலைகளும் நடந்து வருவதாகவும் விஜய்க்கு தகவல்கள் வந்து சேர்ந்தன.
இதனால் அப்செட் ஆன அவர் தற்போது மனம் உடைந்து அமெரிக்காவுக்குப் போய் விட்டார். தனது காவலன் பட புரமோஷனுக்காகவே அவர் அமெரிக்கா போயுள்ளதாக கூறப்பட்டாலும் உண்மையான காரணம் இதுதானாம்.
இதனால் மிகவும் வேதனையில் ஆழ்ந்தார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அவருக்கு விஜய், அதிமுகவுடன் நெருங்குவதில் உடன்பாடு இல்லை. காரணம், முதல்வர் கருணாநிதி மீது தீவிர பாசம் வைத்திருப்பவர் சந்திரசேகர். இதன் காரணமாக முதல்வரையே நேரில் பார்த்து தனது மகனுக்கு ஏற்பட்டு வரும் சிக்கல்கள் குறித்து மனம் விட்டுப் பேசியுள்ளார். முதல்வர் தரப்பிலும் அதுகுறித்து உரிய முறையில் கவனிக்கப்படும் எனஉறுதியளிக்கப்பட்டதாம்.
இருந்தாலும் விஜய்க்கு எழுந்த சிக்கல்கள் குறைந்தது போலத் தெரியவில்லையாம். இதனால் மகனின் சந்தோஷம்தான் முக்கியம் என்பதை உணர்ந்த அவர் தற்போது விஜய் வழிக்கு வந்து விட்டார். தனது மகனின் நிலையை முழுமையாக ஆதரித்துள்ள சந்திரசேகர் நேற்று அதிரடியாக ஜெயலலிதாவை சந்தித்து மனம் விட்டுப் பேசினார். மகனுக்கு வந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளிலும் அதிமுக ஆதரவாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டாராம்.
சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் ஜெயலலிதா வீட்டுக்கு, எஸ்.ஏ.சந்திரசேகர் சென்றார். ஜெயலலிதாவுடனான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. விஜய்க்கு தொழில் ரீதியாக வரும் பிரச்சனை குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் விவரமாக எடுத்துரைத்தார். எஸ்.ஏ.சந்திரசேகரின் புகார்களை பொறுமையுடன் கேட்டறிந்த ஜெயலலிதா அனைத்து வகையிலும் உதவியாக இருப்பதாக உறுதி அளித்தாராம்.
முன்னதாக சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியிருந்தார். சில நிமிடங்களே நீடித்த அந்தப் பேச்சுக்குப் பின்னர் மதுரையில் நடந்த அதிமுக கண்டனக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா. தமிழகத்தில் ஒரு முன்னணி நடிகரின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. அவர் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கிறேன் என்று மட்டும்தான் சொன்னார். அதற்கே அந்த நடிகரின் 4, 5 படங்களை தோல்வி படங்களாக ஆக்கி விட்டனர். இதைப் பற்றி அந்த நடிகர் என்னிடம் முறையிட்டார் என்று கூறியிருந்தார். அது விஜய்தான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். அதேபோல அஜீத்துக்கும் பிரச்சினை வந்தபோது அவரும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
அஜீத்தும் வருவாரா?
இதனால் விஜய்யைப் போலவே விரைவில் அஜீத்தும் கூட அதிமுக பக்கம் வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி பெரும் சிக்கல்கள் புடை சூழ்ந்து வரும் நிலையில், வருகிற17ம் தேதி காவலன் படம் திரைக்கு வருகிறது. அப்படத்தை பிரமாண்ட வெற்றிப் படமாக்குமாறு தனது கட்சியினருக்கு ஜெயலலிதா உத்தரவிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்குள் கட்சியைத் தொடங்கும் விஜய், தனது புதிய கட்சியை அதிமுக கூட்டணியில் இணைத்து அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக, சட்டசபைத் தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
விஜய்யை மையமாக வைத்து தமிழக அரசியலில் புதிய புயல் கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.