கள்ளக்காதலியை தாக்கி, நிர்வாண கோலத்தில் புகைப்படமெடுத்து, இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக அச்சுறுத்திய வர்த்தகர் ஒருவரை நீர்கொழும்பு பிரதான நீதிவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு லுனுகட சந்தியில் அமைந்துள்ள ஹார்ட்வெயார் ஒன்றின் உரிமையாளரான 26 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார். சந்தேக நபர் தளுவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய திருமணமான பெண்ணுடன் கடந்த ஐந்து
வருட காலமாக இரகசிய தொடர்பு கொண்டு வந்துள்ளார். வழக்கின் முறைப்பாட்டாளரான குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடொன்றில் தொழில் செய்து வருவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதேவேளை, முறைப்பாட்டாளருக்கு வேறு சிலருடன் இரகசிய தொடர்பு இருப்பதாக சந்தேக நபருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தொலைபேசிக் கட்டணம் செலுத்தவென முறைப்பாட்டாளரை சந்தேக நபர் அழைத்துச் சென்று தனது கடையின் களஞ்சியசாலையில் வைத்து அவரை தாக்கியுள்ளதுடன் நிர்வாணக் கோலத்தில் அவரைப் புகைப்படம் எடுத்ததுடன் பின்னர் நிர்வாணப் படத்தை இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து கடந்த செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.