அரசியலுக்கு வர மாட்டேன்’னு விஜய் சொல்லவே இல்ல… : ட்விட்டர் அறிக்கை பொய் என மேனேஜர் அறிவிப்பு

நான் அரசியலுக்கு வர மாட்டேன், அதனால் ரசிகர்கள் இனி அரசியல் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடக்கூடாது என்று விஜய் சொன்னதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் விஜய் அப்படிச் சொல்லவே இல்லை, விஜய் ட்விட்டரிலும் இல்லை. அவர் பெயரில் வந்த அறிக்கை யார் வெளியிட்டார்கள் என்றும் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் அவரது பி.ஆர்.ஒ பி.டி.செல்வகுமார். நடிகர் விஜய்க்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் ரசிகர் மன்றங்கள் உள்ளது. அந்த மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அவற்றை அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரன்தான் நிர்வகித்து வருகிறார் . ஆனால் ‘தலைவா’ படம் ரிலீஸாகும் சமயத்தில் அவருக்கு தொடர் அரசியல் நெருக்கடிகள் ஆரம்பித்தன. குறிப்பாக சமீபத்தில் மீனப்பாக்கம் விமான நிலையம் எதிரில் ரசிகர் மன்ற மாநாடு நடத்தி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த ‘தலைவா’ ரிலிஸுலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் நொந்து போன விஜய் ‘தலைவா’ படம் ரிலீஸான பிறகு “நான் அரசியலில் ஈடுபடமாட்டேன்” என்று அவர் சொன்னதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் “எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ரசிகர்கள் தயவு செய்து பேனர்களில் அரசியல் வசனங்களை எழுத வேண்டாம். என் வேண்டுகோளையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைப்பேன். ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனி நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ வேறு யாரோ ரசிகர் மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார். இதை படித்த விஜய் தரப்பு அதிர்ச்சியடைந்தது. காரணம் இந்த அறிக்கையை விஜய் வெளியிடவே இல்லையாம். இதுகுறித்து விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமாரிடம் கேட்டபோது : “விஜய் ட்விட்டரில் இல்லை. நானும் எந்த சமூக வலைத் தளத்திலும் இல்லை. விஜய் பெயரில் இந்தச் செய்தி எப்படி வெளியானதென்று தெரியவில்லை. இது ஒரு போலியான அறிக்கை அதனால் யாரும் இதை நம்ப வேண்டாம” என்று கூறியிருக்கிறார்