யாழ். மாநகரசபையின் வர்த்தக நிலையங்களின் உடைமை மாற்றம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியினால் நிரந்தரத் தீர்வு காணப்பட்டது.


யாழ். மாநகரசபைக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களின் உடைமை மாற்றம் தொடர்பாக நீண்டகாலமாக நீடித்துவந்த குழப்பநிலையானது இன்றையதினம் (24) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முழு முயற்சியின் காரணமாக சுமூகமாக தீர்வுகாணப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக வர்த்தகர்களுடனான மூன்று சுற்று சந்திப்புக்கள் ஏற்கனவே இடம்பெற்ற போதிலும் இன்றுமாலை யாழ். நாவலர் கலாச்சார மண்டபத்தில் யாழ். மாநகரசபை ஆணையாளர் பிரணவநாதன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரின் இணைப்பதிகாரியுமான கே.வி.குகேந்திரன், அமைச்சரின் சட்ட ஆலோசகர் அப்துல் நஜீம், யாழ். வர்த்தக சங்க செயலாளர் ஜனக்குமார் ஆகியோர் பங்குகொண்டனர். ஏற்கனவே நடைபெற்றிருந்த கூட்டங்களில் யாழ்.மாநகர சபையின் சுற்றறிக்கையின் பிரகாரம் வர்த்தக நிலையங்களின் உடைமை மாற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதற்கு மிக அத்தியாவசியமான முற்பணக்கொடுப்பனவு தொடர்பான மாநகர சபையின் நிலைப்பாட்டை விபரித்த மாநகர ஆணையாளர் அது தொடர்பாக வர்த்தகர்கள் உடன்படாதபட்சத்தில் இணக்கப்பாடாக இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மாநகர சபையின் சட்டதிட்டங்கள் தனக்கு தடையாக இருக்குமென எடுத்துரைத்தார். ஆயினும் மாநகர சபையின் வேண்டுகோளை ஏற்று வர்த்தகர்கள் முற்கொடுப்பனவு பணத்தை செலுத்த சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அக்கொடுப்பனவை இலகு தவணை முறையில் செலுத்தக்கூடிய வசதியை அமைச்சரின் அனுசரனையுடன் மேலதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள தன்னால் முயற்சி செய்ய முடியுமென மேலும் தெரிவித்தார். இவ்வடிப்படையில் முற்பணக் கொடுப்பனவை 60 மாதகால தவணை முறையில் மாநகர சபைக்கு செலுத்தக்கூடிய வகையில் இலகு தவணைக் கொடுப்பனவு திட்டமொன்றையும் அவர் வர்த்தகர்களுக்கு முன்வைத்தார். மாநகர ஆணையாளர் முன்மொழிந்த இலகு தவணைக் கொடுப்பனவு திட்டம் தொடர்பாக பல வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கைகள் தற்பொழுது மிகவும் கஸ்டமான நிலையில் இடம்பெறுவதாகவும், பெருமளவு பணத்தை வியாபார நடவடிக்கைகளின் மூலம் தாங்கள் சம்பாதிப்பது என்பது பெரும் கஸ்டமாக இருப்பதாகவும் இதன் காரணமாக மாநகர சபை கோரும் முற்பணக் கொடுப்பனவை குறைந்தளவில் தாம் செலுத்துவதற்கு ஏதுவாக அமைச்சர் அவர்கள் தங்களுக்கு வழிவகைகளை ஏற்படுத்தித் தரவேண்டுமென்றும் கோரிக்கையினை முன்வைத்தனர். இதனையடுத்து உரையாற்றிய அமைச்சர் அவர்கள் மாநகர சபை போதிய வருமானமின்றி மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை வழங்குவதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மாநகர சபையின் சட்டதிட்டங்களுக்கு முரணான வகையில் சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை கைவிடுமாறு தன்னால் ஆணையாளரை அறிவுறுத்த முடியாதென்றும் மாநகர சபையின் வருமானத்தை பாதிக்காத வகையிலும் அதே நேரத்தில் வர்த்தகர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு மேலும் சுமையை கூட்டாத வகையிலும் ஓர் இணக்கமான உடன்பாடு எட்டப்படுவது இச் சந்தர்ப்பத்தில் மிகவும் அத்தியாவசியமானதாக தாம் கருதுவதாகவும் தெரிவித்த அமைச்சர் வர்த்தகர்கள் ஒருமித்து ஒரே குரலில் ஓர் இணக்கப்பாட்டை முன்வைத்தால் அதனை செயற்படுத்துவதற்கு ஏதுவான வகையில் உயர் அதிகாரிகளின் சம்மதத்தை தான் பெற்றுத் தருவதாகவும் இது தொடர்பாக இன்றைய கூட்டத்திற்கு வருவதற்கு முன்னர் இப் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் தான் கலந்தாலோசனை செய்து பின்னரே இக்கூட்டத்தில் பிரசன்னமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் பின்னர் வர்த்தகர்கள் பலரும் தமக்குள் கூடி கலந்தாலோசனை செய்து மாநகரசபை கோரும் இருபது வருடத்திற்குரிய தற்போதைய மாதாந்த வாடகைப் பணத்தை 120 மாதங்களில் இலகு தவணை முறையில் செலுத்த தாங்கள் சம்மதம் தெரிவிப்பதாக வெளிப்படுத்தியதுடன் இதற்காக அமைச்சர் அவர்கள் உரிய உயர்மட்ட அனுமதியை பெற்றுத்தர ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் வர்த்தகர்கள் இதுதொடர்பாக தமது எழுத்து மூலமான சம்மதத்தை மாநகர ஆணையாளரிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறும் இவ்வடிப்படையில் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை தாம் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதியளித்தார். தமது நீண்டகால பிரச்சினையாகக் காணப்பட்ட வர்த்தக நிலையங்களின் உடைமை மாற்றம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியினால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நிரந்தரத் தீர்வு தொடர்பாக யாழ். வர்த்தகர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் அமைச்சரவர்களுக்கு தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.