கடந்த சில நாட்களாக தெல்லிப்பளை, கட்டுவன் மேற்கு பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிணக்கானது கைகலப்புவரை சென்ற நிலையில் அப்பகுதிகளைச் சேர்ந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட மு
றைப்பாட்டினை அடுத்து அமைச்சரவர்கள் அப்பகுதிகளுக்கு இன்று நேரடியாக விஜயம் செய்தார்.
கட்டுவன் மேற்கு வள்ளுவன் சனசமூக மண்டபத்தில் இன்று முற்பகல் அப்பகுதி பிரதிநிதிகளையும் பிரதேச மக்களையும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடிய அமைச்சரவர்கள் எந்தவொரு பொதுமக்களும் எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதுடன் இதனையே பொலிஸாரும் தமது நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று மாலை கட்டுவன் மேற்கு நாச்சிமார் கோவிலடி அண்ணா சனசமூக நிலையத்தில் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சரவர்கள் கடந்தகாலத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களை மறப்போம் மன்னிப்போம் என்ற நியமத்திக்கேற்ப தேவையற்ற விவாதங்களையும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.
மேலும் அங்கு சமூகமளித்திருந்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உரிய பணிப்புரைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சர்ச்சைக்குரிய இடங்களில் காவலரண்களை அமைக்குமாறும் ரோந்து நவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
குறிப்பிட்ட பிரதேசங்களில் எதிர்காலத்தில் எந்தவொரு பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் நாட்களில் தாம் மீண்டும் அப்பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை கண்டுகொள்ளவும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதேச மக்களுடனான இச்சந்திப்பின்போது பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி என்.எஸ்.கஸ்தூரியாராட்சி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ராஜ்குமார், சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், ஜே. 239 கிராம உத்தியோகத்தர் புருஷோத்தமன், சமுர்த்தி முகாமையாளர் தர்மகுலசிங்கம், ஈபிடிபியின் வலிகாமம் வடக்கு இணைப்பாளர் ஜெயபாலசிங்கம் அன்பு ஆகியோரும் உடனிருந்தனர்.


