700 கோடி செலவில் ஒலுவில் துறைமுகம்! நேற்று ஜனாதிபதி மகிந்த திறந்து வைத்தார்

இலங்கையில், கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு மாவட்டத்தில் திருகோணமலை - மட்டக்களப்பு நெடுங்சாலையில் பனிச்சங்கேனி பாலத்தையும், அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் துறைமுகத்தையும் திறந்து வைத்துள்ளார். சுனாமியினாலும் போரினாலும் சேதமடைந்த பாலங்களை புனரமைப்பதற்காக ஜப்பான் அளித்த உதவித் திட்டத்தின் கீழ் 1060 மில்லியன் ரூபா நிதியில் பனிச்சங்கேணி பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நெடுஞ்சாலையில் ஐந்து பாலங்கள் ஜப்பான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பனிச்சங்கேனி பாலத்தை திறந்து வைத்து உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, யுத்தத்தினாலும் சுனாமியினாலும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளில் உயிழப்புகளை தவிர்ந்த ஏனைய சேதங்களை புனரமைத்துக் கொடுப்பதே தனது நோக்கம் என்று கூறினார். முன்னதாக, சுனாமியினால் சேதமடைந்து தற்போது புனரமைக்கப்பட்டுள்ள வாகரை சென் பீட்டர்ஸ் தேவாலய திறப்பு விழா ஆராதனையிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, தனது உரையில் ஒலுவில் துறைமுகத்தின் முன்னோடியாக கருதப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச். எம் அஸ்ரப்பை நினைவு கூர்ந்தார். அம்பாறை மக்களுக்கு நன்மையா? ஒலுவில் துறைமுகத்தின் மூலம் அந்தப் பகுதி மக்கள் நாட்டின் தேசிய அபிவிருத்தியில் இணைந்து கொள்ளும் வாய்ப்புகளை பெறுகின்றார்கள் என்றும் அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் துறைமுக அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தபோது முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஸ்ரப் ஒலுவில் துறைமுக வேலைகளை ஆரம்பித்து வைத்தார். மீன்பிடி துறைமுகத்தையும், வணிக துறைமுகத்தையும் கொண்ட ஒலுவில் துறைமுகத்தை அமைப்பதற்கான செலவினை டென்மார்க் அரசாங்கம் கடனாக வழங்கியுள்ளது. ஒலுவில் துறைமுகம் மூலம் அந்த பகுதி மக்களின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டாலும், அது கேள்விக்குரிய விடயமாகவே இருப்பதாக அந்த பகுதி மக்கள் பலரும் கருதுகின்றனர். ஆனாலும் கடந்த காலங்களில் ஆண்டில் எட்டு மாதங்கள் மட்டுமே தொழிலில் ஈடுபட்டு வந்த ஆழ்கடல் மீனவர்கள், இனிமேல் ஆண்டு முழுவதும் மீன்பிடியில் ஈடுபடும் போது தங்களின் வாழ்வாதரம் முன்னேற்றம் அடையும் என அம்பாறை மாவட்ட ஆழகடல் மீனவர்கள் சங்கத்தின் செயலாளர் எம். எஸ்.எம். நஸீர் தமிழோசையிடம் தெரிவித்தார். மீன்பிடித் துறைமுகம் மீனவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தாலும் வர்த்தக துறைமுகத்தை பொறுத்தவரை ஏற்றுமதி இறக்குமதி பணிகள் நடைபெற்றால்தான் வருமானத்தை ஈட்ட முடியும். தற்போதைய சூழ்நிலையில் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இல்லை என்று தெரிவித்த தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பொருளியல்துறை மூத்த விரிவுரையாளர் ஏ. ஏ. எம். நுபைல், குறித்த துறைமுகம் நாட்டு மக்களுக்கு மற்றுமோர் சுமையாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.