கோச்சடையான் - சில எண்ணங்கள்
கோச்சடையான் - சில எண்ணங்கள்
எனக்கு ரஜினியை எந்த வயதிலிருந்து பிடிக்க ஆரம்பித்தது என்று சரியாக நினைவில்லை.குழந்தை பருவத்திலிருந்தே நான் ரஜினி ரசிகன் ஆகி விட்டேன். சிறிய வயதில் என்னை வசீகரித்த எத்தனையோ விஷயங்கள் நாளடைவில் சாதாரண விஷயங்கள் ஆகிவிட்டன. ஆனால் ரஜினி மீதான ஈர்ப்பு மட்டும் வயது ஏற ஏற அதிகரித்ததே தவிர சிறிதும் குறையவில்லை. அதுதான் ரஜினி மேஜிக். படம் பார்க்க வருபவர்களை தன்னை நோக்கி ஈர்த்து கொள்ளும் காந்தம் அவர்.
'சிவாஜி' படம் வெளிவந்த போது ரஜினி மாநில எல்லைகளை கடந்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சூப்பர் ஸ்டார் ஆகி போனார். அந்த படம் தயாரிப்பில் இருந்த நேரம் 'சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி கொண்டிருந்தார். அந்த படத்தின் டீசர் 'சிவாஜி' படத்தோடு வெளியிடப்பட்டது. உண்மையிலேயே அந்த டீசர் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ரஜினி போன்ற உருவம் கொண்ட ஒரு பொம்மையே சினிமாவின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடிக்க போகிறது என்று எண்ணி கொண்டேன். 'சிவாஜி' ஜூரம் ஒட்டு மொத்த தேசத்திலும் அடித்து கொண்டிருந்த அந்த நாளில் அந்த படம் வெளிவந்து இருந்தால் அதுதான் நடந்து இருக்கும்.
இப்படி அதிரடியாக ஆரம்பிக்கப்பட்ட 'சுல்தான்' பின்னாளில் எதனால் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை. சௌந்தர்யா படம் தயாரித்து நஷ்டம் அடைந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு சில காரணங்களும் இருக்கலாம். சௌந்தர்யா படம் எடுத்து பட்ட கடன்களை அடைத்த ரஜினி அவருக்கு திருமணம் முடித்து வைத்தார். இந்த நிலையில் சுல்தானை ஏறக்குறைய எல்லாரும் மறந்தே விட்டனர்.
ரஜினியின் உடல் நல குறைவுக்கு பின் 'கோச்சடையான்' என்று மீண்டும் ஒரு அனிமேஷன் படம் ஆரம்பித்தனர். சரி, சுல்தானை தூசி தட்டுகிறார்கள் போலும் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை என்று சௌந்தர்யா பேட்டி கொடுத்தார். எது எப்படி இருந்தால் என்ன ,தலைவர் படம் வந்தால் போதும் என்று எண்ணி கொண்டேன். படம் விறுவிறுப்பாக தயாரானது. ரஜினி நடனமாடும் அட்டகாசமான ஸ்டில் வேறு வெளியானது. K.S. ரவிகுமார் படத்தில் இணைந்து கொண்டதும் எனது எதிர்பார்ப்பு அதிகமானது. 'ஜீன்ஸ்' ராஜு சுந்தரம் போலி ஐஸ்வர்யா ராயை ஆட்டுவிப்பது போல, 'கோச்சடையான்' நடிகர்கள் அனைவரும் உடலில் இறுக்கமான ஆடை அணிந்து கொண்டு தங்கள் 3டி மாதிரிக்கு உயிர் கொடுக்கும் மேகிங் வீடியோ பார்த்ததும் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு போனது.
ரஜினி கடந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளிவரும் என்று பேட்டி கொடுத்தார். தயாரிப்பு நிறுவனமோ தீபாவளிக்கும் முன்னரே படம் வெளிவரும் என்றது. ஆனால் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. ஆண்டு ஒன்று ஓடிப்போனது. ரஜினிக்கு படத்தில் திருப்தி இல்லை; படம் கைவிடப்பட்டு விட்டது என பேச்சு எழ தொடங்கியது. ஆனால் விநாயகர் சதுர்த்தி அன்று டீசர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் வதந்திகள் அடங்கி விட்டன. சொன்னபடி டீசரும் வெளியானது.
கடந்த திங்கள் அன்று ஆவலோடு முதல் முறையாக டீசர் பார்க்க ஆரம்பித்தவனுக்கு அதிர்ச்சி. டீசர் 'சுல்தான்' பட டீசரை விட மோசமாக தெரிந்தது. என்ன காட்சிகள் ஓடுகிறது என்றே புரியவில்லை. இந்த தரத்தில் படம் எடுக்கவா இதற்கா இத்தனை நாட்கள் என திகைத்தேன். ஒரு வேளை கேன்ஸில் ரஜினி படத்தின் ட்ரைலரை வெளியிட விடாமல் தடுக்க இதுதான் காரணமோ என எண்ணினேன். அப்போதுதான் யூ ட்யூபில் இருந்த அந்த கமெண்டை கவனித்தேன்.
டீசரை 1080 hd தரத்தில் பார்க்கவும் என்று பரிந்துரைத்து இருந்தது அந்த கமெண்ட். அங்கே குறிப்பிட்டு இருந்தபடி வீடியோ குவாலிட்டி மாற்றி பார்த்த பின்தான் மனம் ஓரளவு ஆறுதல் அடைந்தது. உண்மையிலேயே படத்திற்காக நிறைய மெனக்கெட்டு உள்ளனர். சில காட்சிகள் நன்றாகவே உள்ளன. ஒரே ஒரு குறை ரஜினியின் முகத்தை இன்னும் சற்று துல்லியமாக வடிவமைத்து இருக்கலாம். தந்தை ரஜினியின் முகம் ரஜினி போலவே இல்லை. மகன் ரஜினியின் முகமோ உடலை விட்டு வித்தியாசமாக, ஒட்டப்பட்டது போல தெரிகிறது. ரஜினியின் முகத்தை மட்டும் துல்லியமாக வடிவமைத்து இருந்தால் அது மற்ற எல்லா குறைகளையும் மறைத்து இருக்கும். ரஜினியின் முகத்துக்காக படம் பார்க்க வருபவர்கள்தானே அதிகம்.
இந்த டீசரை பார்த்து பலர் இந்த படம் தோல்வி அடையும் என்று சிலர் கணித்து இருப்பார்கள். ஆனால் எனக்கு என்னவோ இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று தோன்றுகிறது. ஒரு வேளை மெகா ஹிட் ஆனாலும் ஆகலாம். ஏனெனில் எதையும் நடத்தி காட்டுவதுதானே ரஜினி மேஜிக்.