கடன் சுமை தாங்க முடியாது தலைமறைவாகும் யாழ். தென்மராட்சி பிரபல வர்த்தகர்கள்!

தென்மராட்சியில் பிரபலமான வர்த்தகர்கள் பலர் கடன் சுமை தாங்க முடியாது குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளனர். அண்மைக்காலமாக இவ்வாறு மிகப் பிரபலமான பல வர்த்தகர்கள் கடன் சுமையின் நிமித்தம் வர்த்தக நிலையங்களை இழுத்து மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
தென்மராட்சியிலும், அதிலும் குறிப்பாக சாவகச்சேரி நகரில் உள்ள பல கடை உரிமையாளர்களே இவ்வாறு தலைமறைவாகியுள்ளனர்.

இன்னும் சிலர் தமது சொத்துக்களை விற்கும் அளவுக்குச் சென்றுள்ளனர்.

புடைவைக் கடை, பாதணிக் கடை, உணவகம், இறைச்சிக் கடை மற்றும் பல சில்லறை வியாபாரம் செய்த கடை உரிமையாளர்கள் அண்மைக்காலத்தில் மறைந்துள்ள நிலையில் கடந்த வாரமும் இவ்வாறு ஒரு கடை உரிமையாளரை காணவில்லை.

கடையும் பூட்டப்பட்ட நிலையில் கடன் கொடுத்தவர் கடையை உடைத்துப் பார்த்தால் கடையில் உள்ள பெறுமதியான பொருட்கள் ஏற்கனவே இடம் மாற்றப்பட்டுள்ளதைக் கண்டு ஏமாற்றமடைந்துள்ளார்.

கடையில் வேலை செய்வோர் காலையில் சென்று கடை வாசலில் நீண்ட நேரம் காத்து நின்ற நிலையில், உரிமையாளரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுள்ளனர். தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்தமையால் ஏமாற்றத்துடன், வீடு திரும்பியுள்ளனர்.

சிலர் சிலர் வேலையாளர்களுக்கு சம்பளம் கூட வழங்கப்படவில்லை என பாதணிக் கடை யொன்றில் வேலை செய்த யுவதி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறான வர்த்தகர்கள் தலைமறைவாகும் சம்பவங்கள் குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.