கட்டுநாயக்காவில் தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது- அமெரிக்க டொலர்களை கடத்த முயற்சித்த கொரியப் பிரஜையின் பணம் பறிமுதல்Srilanka Tamil News



தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் செல்ல முற்பட்ட நபரொருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு பயணம் செய்யவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே தங்க பிஸ்கட்டுக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி 10, 45,000 ருபாய் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமெரிக்க டொலர்களுடன் செல்ல முற்பட்ட கொரியா நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரியப் பிரஜையிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க டொலர்களை கடத்த முயற்சித்த கொரியப் பிரஜையின் பணம் பறிமுதல்

பதினைந்து லட்ச ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்கு முயற்சித்த கொரிய பிரஜை ஒருவரின் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக குறித்த பணத்தை கடத்தி செல்ல முயற்சித்துள்ளார்.

இந்தியாவின் சென்னைக்கு இந்தப் பணத்தை எடுத்துச் செல்ல முயற்சித்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்த குறித்த கொரிய பிரஜையிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயணப் பொதிகளை பரிசோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணத்தை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளதுடன், கொரிய பிரஜைக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.