18 கோடியே 95 லட்சம்! மங்காத்தாவின் தமிழக உரிமை?


மங்காத்தா படத்திற்கு வந்த முதல் நாள் கூட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் பிரமிக்க
வைத்திருக்கிறது. ரஜினி படங்களுக்கு வருகிற அதே கூட்டம் அஜீத்
படத்திற்கும் வந்தது. இதையடுத்து அடுத்த சூப்பர் ஸ்டார் நாற்காலி யாருக்கு
என்ற கேள்வியும், அது குறித்த விமர்சனங்களும் எழ ஆரம்பித்திருக்கிறது
கோடம்பாக்கத்தில்.

அஜீத் பட வெற்றியை அவரேதான் முறியடிக்க
வேண்டும் என்பது போல இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தின் தமிழ்நாடு
வெளியீட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாம். இதன் மதிப்பு மொத்தம் 18 கோடியே 95
லட்சம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

பந்தின் வடக்கு பக்கம் காற்றடித்தால்
தெற்கு பக்கமும் வீங்கும் என்பது போல, இந்த படத்தின் விலையை கருத்தில்
கொண்டு டிக்கெட் விலையை பன் மடங்கு உயர்த்தி விற்க சொல்கிறார்களாம்
விநியோகஸ்தர்கள். இதற்கு அநேக தியேட்டர்கள் சம்மதித்தாலும், சென்னையில்
இயங்கி வரும் கார்ப்பரேட் தியேட்டர்கள் மட்டும் கைகட்டி வாய் பொத்தி
நிற்கிறதாம். அரசு நிர்ணயித்த விலையை தாண்டி விற்க முடியாது என்று இவர்கள்
கூறி வருவதால் செய்வதறியாது திகைக்கிறார்களாம் விநியோகஸ்தர்கள்.

இது ஒருபுறம் இருக்க, படம் ஹிட் என்றால்
திருப்பதியில் மொட்டை என்று வேண்டியிருந்த டைரக்டர் வெங்கட்பிரபு தனது
பிரார்த்தனையை நிறைவேற்றிவிட்டு வந்திருக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு
மொட்டை போட்டே பழகிய சில இயக்குனர்கள் வெங்கட் பிரபுவை பார்த்தாவது
மாறுவார்களா?