ஆதரவு எந்தளவுக்கு இருக்கிறதோ, அதைவிட கூடுதலாக எதிர்ப்பை சம்பாதித்து வைத்திருப்பார் போலிருக்கிறது தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர். மீண்டும் தேர்தல் வேண்டும் என்று ஒரு குழுவினர்
போராடிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலே வேண்டாம். பொதுக்குழுவை கூட்டி ஆதரவை நிரூபித்து நானே தலைவராக நீடிப்பேன் என்று முண்டா தட்டிக் கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. இந்த போராட்டத்தின் முடிவு எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்குள் நாலைந்து மண்டைகள் உடையும் போலிருக்கிறது.
செப்டம்படர் 4 ந் தேதி பொதுக்குழு என்று அறிவித்துவிட்டார் எஸ்.ஏ.சி. அதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது. திடீரென்று எதிர் முகாமை சேர்ந்த பாபு கணேஷ் என்ற தயாரிப்பாளர், சென்னை நகர காவல் துறை ஆணையர் திரிபாதியை சந்தித்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் பற்றிய தனது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார். அவர் கொடுத்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்ன?
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 4-ந் தேதி அன்று நடைபெறும் என்று அதன் தலைவராக தன்னை பிரகடனம் செய்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக சென்னை 5-வது சிட்டிசிவில் கோர்ட்டில் வழக்கு உள்ளது. 5-ந் தேதி அன்று அந்த வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.
அதற்குள்ளாக எஸ்.ஏ.சந்திரசேகரன் 4-ந் தேதி அன்று பொதுக்குழுவை கூட்டியிருக்கிறார். பொதுக்குழு கூட்டம் ஆயிரம் விளக்கில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தில் 200 பேர்தான் உட்கார முடியும். ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் 1900 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கண்டிப்பாக அந்த கூட்டத்தில் தகராறு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அதை தடை செய்யவேண்டும்.
இதையடுத்து காவல் துறையினர் தலையிட்டு இடத்தை மாற்றும்படி உத்தரவிட்டுள்ளனராம். எனவே இந்த பொதுக்குழு தள்ளி வைக்கப்படும் போல தெரிகிறது. இதற்கிடையில் எஸ்.ஏ.சி க்கு எதிராக திரண்டிருக்கும் சில தயாரிப்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஒரு மனு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
முதல்வரான உங்கள் பெயரை எஸ்.ஏ.சி தவறான முறையில் பயன்படுத்தி அப்பாவி தயாரிப்பாளர்களை அச்சுறுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.