யாழ். நகர் கரையோரப் பகுதி கடற்றொழிலாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு.
யாழ். நகர் கரையோரப் பிரதேசம், குருநகர் மேற்கு பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதேச கடற்றொழிலாளுர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.
முன்னதாக தமது தேவைகள் பிரச்சினைகள் குறித்து அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அமைச்சரவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததை அடுத்து அப்பகுதிக்கு தாம் நேரடியாக வருகை தருவேன் என வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக இன்றைய விஜயம் அமைந்திருந்தது.
குருநகர் மேற்கு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து நேரடியாக கண்டறிந்தார். குறிப்பாக மீன்பிடிப்படகுகளை நிறுத்திவைப்பதற்கான ஏற்பாடுகள், உரிய இறங்குதுறை வசதிகளை ஏற்படுத்தல், ஓய்வு மண்டபம் ஒன்றின் தேவை, மீன்பிடி வலைகளைக் காயப்போடுவதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் பொருத்தமான இடத்தினை தெரிவுசெய்தல், பிரதேச மின்விநியோகம், வீதி அபிவிருத்தி, மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து கடற்றொழிலாளர்களினால் எடுத்துக்கூறப்பட்டது. அவற்றினை கவனத்தில் எடுத்துக்கொண்ட அமைச்சரவர்கள் அத்தேவைகளை தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
கடற்றொழிலாளர்களுடனான அமைச்சரின் மேற்படி சந்திப்பின்போது யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா, இணைப்புச் செயலாளர் ராஜ்குமார், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் சுதாகர், யாழ். நகர மின் அத்தியட்சகர் அருள்நாதன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
