பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இலங்கை ஊடாக இந்தியாவுக்குள் நுழைவதைத்தடுக்க கரையோரப் பாதுகாப்பு தீவிரம்!

பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இலங்கை ஊடாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கலாமென விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்து இந்தியா தனது கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன் கரையோரம் திரும்பிவரும் அனைத்து இந்திய மீன்பிடிப் படகுகளையும் சோதனையிட்டு வருகின்றது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொள்ளவென யாழ்ப்பாண கடற்பரப்பை பயன்படுத்தலாமென இதற்கு முன்னர் வெளிவந்த செய்திகளை இலங்கை இராணுவம் கடந்த புதனன்று ஏலவே மறுத்திருந்தது.எது எப்படியிருந்தபோதிலும் இந்தியத்தென் கரையை அடைந்த மீன்பிடிப் படகுகளை இந்திய கடற்படையினரும் கரையோர பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து துருவித் துருவி பரிசோதனை நடத்தியதாக டைம்ஸ் ஒவ் இந்தியா நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இது குறித்து தமிழ்நாடு இயந்திரப் படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் பி.ஜேசுராஜன் தெரிவிக்கையில், அனைத்து மீன்பிடிப் படகுகளையும் சோதனையிட்ட கடற்படையினர் கடற்றொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள மீன்பிடி அடையாள ஆவணங்களையும் தீவிரமாக பரிசோதித்ததாகவும் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த பாதுகாப்பு அச்சுறுத்தலை அடுத்து சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் கடலோரப் பாதுகாப்புப் பிரிவினரால் பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதன் அங்கமாகவே இச்சோதனை நடவடிக்கை எடுக்கப்படுவதாகவே தாங்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டார். வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள நான்கு தொடக்கம் ஐந்து வரையான மீன்பிடிப் படகுகள் மூலம் உணவுப் பொருட்களையும் தண்ணீரையும் நடுக்கடலில் ரோந்து புரியும் தங்களின் பெரிய கப்பல்களுக்கு கடற்படையினர் எடுத்துச் செல்வதாகவும் காலையில் கரைக்குத் திரும்பும் மீன்பிடிப் படகுகளை அவர்கள் சேதனையிட்டு வருவதாகவும் மீனவர் தெரிவித்துள்ளனர். இராமேஸ்வரத்தில் உள்ள கடற்றொழில் திணைக்கள வட்டாரங்கள் இதுபற்றி தெரிவிக்கையில், மீன்பிடிப் படகுகள் பதிவு ஆவணங்களையும் மீனவர் பற்றிய விபரங்களையும் கடற்படையினர் நுணுகி ஆராய்ந்து வருவதாகவும் இதன் பின்னணியில் உள்ள சரியான காரணத்தை தங்களால் அறிந்துகொள்ள முடியாமலிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மண்டபம் நிலையத்தில் உள்ள கரையோர காவற் படை வட்டாரங்களோடு வழமையான ரோந்து நடவடிக்கையே இதுவெனவும் ஆயினும் கடந்த வியாழனன்று இந் நடவடிக்கை முழுமையான அளவில் நடத்தப்பட்டதாகவும் கரையோர காவற்படை படகுகள் இருபத்து நான்கு மணி நேர ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டன.இதுபற்றி மண்டபத்தில் அமைந்துள்ள கரையோர பாதுகாப்புப் படை தலைமை அதிகாரி எச்.ஹரிஷ்மோர் கூறுகையில், தாங்கள் இருபத்து நான்கு மணி நேர ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் எந்தவொரு நிலைமையையும் சமாளிக்க தாங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.