மூடர் கூடம் விமர்சனம் -பாண்டிராஜை விழுங்கி ஏப்பம்விட்ட இயக்குநர் நவீன்



மூடர் கூடம் படத்தைப் பார்க்கணும்னு நினைச்சதுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவதா இந்த படத்தை இயக்கியிருப்பவர் பாண்டிராஜின் உதவியாளர், படத்தை ரிலீஸ் செய்திருப்பது பாண்டிராஜ். அடுத்து முக்கிய காரணம் இந்த படத்தின் பாடல்களும் டிரைலரும்தான். இந்தப் படத்தின் பாடலையும் டிரைலரையும் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போதே இந்த மூடர் கூட பசங்க ஏதாவது வித்தியாசமா அப்ரோச் பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்ததுதான். அதை இம்மியும் பிரசாகாமல் நிறைவேற்றியிருக்கிறார்கள் மூடர் கூடத்தினர்.
ஊர்ல தன் அப்பாவும் அம்மாவும் இறந்துவிட சொந்த ஊரிலேயே யாருமற்றவனாய் இருப்பதை விட சென்னையில் இருக்கும் மாமாவைப் போய் பார்த்து ஏதாவது உதவி கேட்கலாம் என்று சென்னைக்கு வருகிறான் வெள்ளை. வந்த இடத்தில், மாமா உட்கார வெச்சு ஒரு கப் காபியோடு வெள்ளையை திருப்பி அனுப்பிவிடுகிறார். அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நிற்கும் வெள்ளை ஒரு திருமண வீட்டில் சாப்பிட போகும் போது நகையைத் திருடிவிட்டதாக போலீசில் ஒப்படைக்கப்படுகிறான். இது போன்றே அந்த காவல் நிலையத்திற்கு வந்து சேருகிறார்கள் நவீன், குபேரன், சென்ட்ராயன். ஒவ்வொருவரும் காவல் நிலையம் வர ஒவ்வொரு காரணங்கள். நான்கு பேரும் நட்பாகிவிடுகிறார்கள். அப்போ வெள்ளை, தன் மாமா வெளியூருக்கு போகப் போகிறார் அவர்கள் வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கு என்கிறான். அந்த பணத்தை கொள்ளையடிக்கலாம் என்கிறான் நவீன். கொள்ளையடிக்க திட்டம் போட்டு மாமா வீட்டுக்கு போனால் அங்கே யாரும் வெளியூர் போவில்லை. எல்லோரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். அப்புறம் என்ன ஆச்சு? என்பது மீதி கதை.


பாண்டிராஜின் உதவியாளர் நவீன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர் கதை சொல்லும் பாணியில் பாண்டிராஜையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவார் போலிருக்கிறது. நான்கு பேரும் காவல் நிலையம் வர காரணம், அப்புறம் நான்கு பேரும் நட்பாவது, இவர்களுக்கு ஆளாளாளுக்கு ஒரு ப்ளாஷ்பேக், நாய்க்கு ஒரு பாடல் வைத்திருப்பது என பல இடங்களில் பிரமிக்க வைக்கிறார் நவீன்.
படம் துவங்கியதில் இருந்தே நம்முள் ஒரு எதிர்பார்ப்பு நாற்காலி போட்டு உட்கார்ந்து விட அதற்கு தீனி போட்டுக் கொண்டே இருக்கிறது மூடர் கூடம். திருட போன வீட்டிலேயே பாதிபடம் நகர்ந்து விடுகிறது. அந்த வீடு, மூன்று அறைகளை வைத்தே அவ்வளவு சுவாரஸ்யமாக கதை சொல்லியிருக்கிறார் நவீன். முதல் பாதியில் கதையோடு பயணிக்கும் படம் இடைவேளைக்குப் பிறகு காமெடியில் களை கட்டுகிறது. சிரித்துக் கொண்டே இருக்கலாம். சிடி, பொம்மை திருட வந்த திருடன், குப்பத்து ரவுடி ஒருவன், சேட்டு தொடங்கி ஆளாளுக்கு கலகலக்க வைக்கிறார்கள். என்ன ஏன்டா அடிக்கிறீங்க என அந்த சிறுவன் பேசும் காட்சி, என் அம்மாவின் நினைவாக நான் வைத்திருந்த தாலி என சொல்லி தாலியை வெள்ளை ஓவியாவின் காதலனிடம் கொடுக்கும் காட்சி என சில இடங்களில் கண்கலங்கவும் வைத்துவிடுகிறார்கள்.
வெள்ளை என்னும் கேரக்டரில் ராஜாஜ் நடித்திருக்கிறார். இவர் மாமா வீட்டுக்கு வருவதும், காபி முடித்த கையோடு அவர்கள் வெள்ளையைக் கிளப்பி விடுவதுமான காட்சியிலேயே நமக்கு பிடித்தவராக மாறிப் போய்விடுகிறார் வெள்ளை. இவருக்கு ஜோடியாக பர்ஸானா கேரக்டரில் நடித்திருக்கிறார் சிந்து. ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே வந்து போனாலும் மனதில் கோந்து போட்டு பச்சக்கென ஒட்டிக் கொள்கிறார் சிந்து. இவரது விழிகளின் வண்ணம்தான் கொஞ்சம் இரிடேட்டிங்காக இருக்கிறது.
இன்னொரு ஹீரோவாக வருகிறார் நவீன். படத்தை இயக்கியிருப்பதும் இவர்தான். இவர் வரும் காட்சிகளில் எல்லாம் கொஞ்சம் அவ்வப்போது தத்துவங்களையும் பிச்சி பிச்சி ரசிக்கும்படியாகப் போட்டுவிட்டுப் போகிறார். இவரது காட்சிகள் செம இன்ட்ரஸ்டிங்காக இருக்கின்றன. நான்கு பேர் கூட்டணியை வழிநடத்துபவரும் இவர்தான். சென்ட்ராயனிடம் ரூமுக்குள் ஒரு பெண் வந்தால் என்று இவர் சொல்லும் உவமைக்கு தியேட்டரில் ஏகப்பட்ட க்ளாப்ஸ் விசில் ரெஸ்பான்ஸ். கூத்துப்பட்டறையைச் சேர்ந்த குபேரனுக்கு குபேரன் என்னும் கதாப்பாத்திரம். இவரது அறிமுகக் காட்சியில் பார்ப்பதற்கு கிறுக்கன் போல இருந்தாலும், போகப் போக இவருக்கும் நமது ஓட்டு கிடைத்துவிடுகிறது. சென்ட்ராயன், ஏற்கனவே சில குறும்படங்களில், படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில கலக்கு கலக்குன்னு கலக்கியிருக்கிறார் சென்ட்ராயன். இவர் வரும் காட்சிகள் எல்லாமே காமெடி கலக்கல்தான். இன்னொரு ஹீரோயினாக வரும் ஓவியா இவர்களில் யாருக்கும் ஜோடி இல்லை என்றாலும் ரொம்பவே நம்மை இம்ப்ரஸ் பண்ணுகிறார். ஓவியாவுக்கு அழகான அம்மாவாக வருகிறார் அனுபமா குமார். ஓவியாவின் அப்பாவாக நடித்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ்.
நடராஜன் சங்கரன் மூடர் கூடம் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் துவக்க காட்சியில் தொடங்கி இறுதி வரை படத்தோடு நம்மை கட்டிப் போடுகிறது பின்னணி இசை. பாடல்கள் எல்லாமே சூப்பர். அனிமேஷனில் வரும் குபேரன் முட்டாப் பயதான்… பாடல் முணுமுணுக்க வைக்கிற ரகம். அந்த பாடலுக்கு வரும் அனிமேஷன் காட்சிகள் ரொம்பவே இன்ட்ரஸ்டிக்காக இருக்கின்றன. நாய்க் குட்டிக்கு என ஒரு தனி பாடலையே வைத்திருக்கிறார்கள். நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பாடலை ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். டோனி சானின் ஒளிப்பதிவும் அத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றன.
மூடர் கூடம் முதல்பாதி கதையிலும் அடுத்த பாதி காமெடியிலும் கலகலக்க வைக்கிறது. இரண்டரை மணி நேரத்திற்கு அதிகமான நேரம் நம்மை சீட்டோடு கட்டிப் போட்டுவிடுகிறார்கள்.