ஆனந்தவிகடன், படங்களுக்கு மதிப்பெண் கொடுப்பது தவறானது.



ஆனந்தவிகடன், படங்களுக்கு மதிப்பெண் கொடுப்பது தவறானது; நியாயமற்றது -இயக்குநர் ராம்


ஆனந்த விகடன் மதிப்பெண்ணிற்கு எதற்கு மதிப்பளிக்கிறீர்கள்? அடுத்த பணியைத் தொடருங்கள். மதிப்பெண் கூடக்கேட்கிறார் ராம் என்ற எள்ளல்கள். எதிர் விமர்சனம் தேவையே, தேவையற்றது என்று பலவிதமான கருத்துக்கள், கேள்விகள், தூற்றல்கள், பாராட்டுக்கள், முகநூல்களிலும் இணைய தளங்களிலும், நேரிலும் கைப்பேசியிலும்.
படைப்பாளிகள் சங்கம் தொடங்கப்பட்ட போது சங்கத்தின் ஆகப்பெரிய இயக்குநர்கள் ஆனந்த விகடனிடம் நேரடியாகக் கேட்ட அதேக் கேள்வியைத்தான் நானும் கேட்டேன். நிறைய இயக்குநர்கள் எங்களுக்குள் அடிக்கடிக் குறைப்பட்டுக் கொண்டு வெளியில் பேசாமல் விட்ட அதேக்கேள்வியைத்தான் நானும் கேட்டேன்.
இன்னும் 4 மார்க் கூடப் போடுங்க என்று நான் கேட்கவில்லை. மதிப்பெண் அளிக்கும் பாங்கு தவறானது அது நியாயமற்றது.  திரைக்கலையை வளர்ப்பதும் ரசிகனின் ரசிப்புத் தன்மையை உயர்த்துவதும் படைப்பாளியை அடுத்தத் தளத்திற்கு மாற்றிக்  கொண்டு போவதுமே விமர்சனம். ஆனால் மதிப்பெண்கள் இதற்கு எதிரான திசையிலேயே விமர்சனத்தை இட்டுச் செல்கின்றன. தம் காலிற்கு பொருந்தாத செருப்பு தவறானது என்ற பார்வையில் எழுதப்படுகின்ற விமர்சனம், விமர்சனம் அல்ல பார்வையே. என்பதைத் தான் நான் சொன்னேன், கேட்டேன்.

விமர்சனத்தை ஒரு கலையாக நான் கருதுவதனால்தான் நான் கேட்டேன், கேட்கிறேன், கேட்பேன். ”தங்கமீன்களை” முன் வைத்துக் கேட்பதனால் இது தங்கமீன்களுக்கானது என்பது பொருள் அல்ல.
ஏனையப் பத்திரிகைகளை ஊடகங்களைக் கேட்காமல் ஆனந்த விகடனை மட்டும் கேட்பது ஏன் என்றரீதியிலும் கேள்விகள் வரத்தான் செய்கின்றன.
விமர்சனத்திற்கு மதிப்பெண் கொடுப்பது ஆனந்த விகடன் மட்டும் தான். மற்றும் ஆனந்த விகடன் இலக்கிய எழுத்தாளர்களுக்கும், இலக்கியத்தோடு தொடர்புடையவர்களுக்கும், வேளாண்மைக்கும், குழந்தைகளுக்கும் மேலும் குறிப்பாக ஈழத்திற்கும் இடமளிக்கிற ஒரு தமிழ் இதழாக தமிழ்ச்சூழலில் வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் திரைப்படத்தையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு மட்டும் அல்ல எங்கள் துறை சார்ந்த அனைவருக்கும் இருக்கிறது.