இப்படியும் வியக்க வைக்கும் சில மனிதர்கள்!

இப்படியும் வியக்க வைக்கும் சில மனிதர்கள்!

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள கர்னல் யுனிவர்சிட்டிக்கும், தமிழ்நாடு மதுரைக்கு அருகில் உள்ள பாப்பனாயக்கன்பட்டியில் இருக்கும் நாகலட்சுமி அம்மாள் அறிவியல் கல்லூரிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

'என்னங்க, நீங்க மலைக்கும், மடுவுக்கும் முடிச்சு போடுறீங்க' எனக் கேட்கிறீர்களா? திரு.கோதண்டராமன் எனும் இந்த மனிதரைப் பற்றி படியுங்கள். பின்னர் நீங்களே இது மலைக்கும், மடுவுக்கும் உள்ள முடிச்சு அல்ல. மலைக்கும் மலைக்கும் உள்ள முடிச்சு என்பீர்கள்.

சொந்த ஊர் மதுரை என்றாலும் கோதண்டராமன் பணியாற்றியது அமெரிக்க நிறுவனத்தில். இரு பிள்ளைகளும், ஒரு பெண்ணும் அங்குதான் பிறந்தார்கள், படித்தார்கள். பிறகு அங்கேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலும் ஆகிவிட்டார்கள்.

ரிட்டயர் ஆகிவிட்ட கோதண்டராமனுக்கு அமெரிக்காவில் இருக்க இருப்புக் கொள்ளவில்லை. மனைவி பிள்ளைகளின் பேச்சைக் கேளாமல் மதுரை வந்தார். இனி அவர் வாயாலேயே கேட்போமே...



திரு.கோதண்டராமன்

"எனக்கு அமெரிக்காவில் ரிட்டையர் ஆனதும் இருப்பு கொள்ளவில்லை. என் குடும்ப சூழல் காரணமாக அமெரிக்காவில் வேலை கிடைத்த உடனே அங்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. எனினும் எனது தந்தை ஒரு இலவச ஆரம்ப பள்ளி நடத்தி வந்தார்.

இருந்தாலும், எனது படிப்பைக் கொண்டு, எனது தாய் மண்ணுக்கு என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய்விடுமோ என்கிற ஏக்கத்துடனே நான் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தேன். ரிட்டையர் ஆனதுதான் தாமதம். உடனடியாக மதுரைக்கு கிளம்பி வந்து, பாப்பநாயக்கன் பட்டியில் பெரிய இடம் ஒன்றை வாங்கி,

அங்கு கல்லூரி கட்டத் துவங்கினேன். எனது மனைவி, குழந்தைகளுக்கு இதில் இஷ்டமில்லை என்றாலும், எனது ஆத்ம திருப்திக்காக  இதை அனுமதித்தார்கள். கல்லூரியை எனது சொந்த பணத்தில் முழு வீச்சில் கட்டி முடித்தேன். 1996ம் ஆண்டு மதுரை பாப்பநாயக்கன் பட்டியில் நாகலட்சுமி அம்மாள் அறிவியல் கல்லூரியை துவக்கினேன்.

இந்த கல்லூரி நகர வாசனை இல்லாத கிராமத்தில் அமைய வேண்டும் என்று விரும்பினேன். இதற்கு காரணம் அமெரிக்கவில் உள்ள கர்னல் யுனிவர்சிட்டி, நியுயார்க்கில் இருந்து வெகு தொலைவில் நகர வாசனையே இல்லாத ஒரு கிராமத்தில் அமைந்து இருந்த சூழல் எனக்கு மிகவும்  பிடித்துப் போனது.

மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்க இதுபோன்ற சூழல் மிக முக்கியம் என்று நான் கருதினேன். இந்த பாப்பநாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள எனது அறிவியல் கல்லூரி, மதுரையை சுற்றியுள்ள 30 கிராம ஏழை மாணவ மாணவிகளின் படிப்புக்கு பேருதவியாக இருக்கிறது.

குறிப்பாக பெண் குழந்தைகளை கல்லூரி தூரத்தில் இருக்கிறது என்று பயந்து கொண்டும், அதிக பணம் கட்டி படிக்க வைக்க வேண்டும் என்று பயந்து கொண்டும், இங்கு சுற்றுவர கிராமத்து மக்கள் பெண் குழந்தைகள் படிப்பை +2 உடன் நிறுத்தி விடுவார்கள்.

அவர்களுக்கு நான் ஆரம்பித்து வைத்த இந்த கல்லூரி, ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். நான் மற்ற கல்லூரிகளில் வாங்குவதை விட பாதியாகத்தான் கட்டணம் வசூலிக்கிறேன். ஆனால், கல்லூரி பேராசிரியர்களுக்கு உரிய சம்பளத்தை கொடுத்து விடுவேன்.

கல்லூரி பேருந்து இலவசம், காலை 9 மணிக்கு கல்லூரிக்குள் வந்தார்கள் என்றால், மாலை 4 வரை அவர்களால் கல்லூரியை விட்டு வெளியில் செல்ல முடியாது. அப்படி செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், சுற்று வட்டார 30 கிலோ மீட்டர் பரப்பளவில் வெறும் கிராமம் மட்டும்தான்.


இந்த கல்லூரியில் பெண்களின் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கிறேன், நிறைய பெண்கள் படிக்கிறார்கள். எனது மனைவிக்கு அமெரிக்க குடியுரிமை கிடத்து விட்டது. எனக்கு க்ரீன் கார்டுதான். என் மனைவி பாவம் இதை விட்டு விடுங்கள் இந்த 70 வயதில் உங்களுக்கு ஏன் இத்தனை கஷ்டம் என்று கேட்டாலும், எனக்கு உறுதுணையாக இருப்பார்.

அவர் பெயர் பாக்கியம். கல்லூரிக்கு செலவை கட்டுப்படுத்த வருவாய் போதாது. அவ்வப்போது எனது பிள்ளைகள் எனக்கு வேண்டியதை தருவார்கள். இன்னும் 80 வயது வரை ஆண்டவன் என்னை ஆரோக்கியமாக வைத்து இருக்க வேண்டும், நமது நட்டு ஏழை மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைக் செய்ய வேண்டும். இதுதான் எனது லட்சியம்." என்று கூறுகிறார் கோதண்டராமன்.

எத்தனை மனிதர்கள் இப்படி சொந்த மண்ணுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்? சம்பாதித்த மொத்த பணத்தையும் எந்தவித பிரதி பலனும் பார்க்காமல் மொட்டை பொட்டல்  காட்டில் கல்லூரி நடத்தி, அங்கு கல்லூரிக்கு செல்ல இயலாமல் தவித்து வரும் மொட்டைக் காட்டு ஏழை மாணவர்களுக்கு அவரால் இயன்ற அளவில் கல்விக்கண்ணை வழங்கி வருகிறார்.

இப்போது சொல்லுங்கள் கோதண்டராமன், மலையா, மடுவா?, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இயக்குனர் ஷங்கர் எடுத்த 'சிவாஜி' திரைப்படத்தில் அமெரிக்காவில் படித்து முடித்து இந்தியா வரும் ரஜினிகாந்த் இங்கு கல்லூரி திறக்க ஆசைப்படுவார். சினிமாவில் தான் இதுவெல்லாம் சாத்தியம் என எண்ணுபவர்கள் கோதண்டராமனை நிச்சயம் ஒரு முறை நேரில் சந்தியுங்கள்.