சிறிலங்காவை மிரட்டும் மேற்குலம்: நெருக்கடியில் மஹிந்த அரசு!

சிறிலங்காவை மிரட்டும் மேற்குலம்: நெருக்கடியில் மஹிந்த அரசு!

பூகோள ராஜதந்திர நெருக்கடிக்குள் சிக்கியுள்ள சிறிலங்காவுக்கு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரிலும் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 24 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தொடரின் முதல்நாள் அமர்வில் உலக நாடுகள் பல, மனித உரிமை விவகாரம் சம்பந்தமாக சிறிலங்காவை கடுமையாகச் சாடியிருந்த நிலையில், இரண்டாம் நாள் அமர்வில் மனித உரிமை அமைப்புகள் பல இணைந்து சிறிலங்கா அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்களைக் கையாள்வதற்கு அனைத்துலக பொறி முறை அவசியம் என்றும் அவை வலியுறுத்தின.

மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் அமைப்பு உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்புகள் சிறிலங்காவுக்கு எதிராக கடும் கண்டனங்களை முன்வைத்துள்ளன.

சிறிலங்காவில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்தவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் உட்பட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான சிறிலங்கா அரசின் அடக்குமுறைகள், முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல்கள், அனைத்துலக விசாரணைக்கான அவசியம் என சிறிலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளன.

சிறிலங்காவில் தொடர்பில் அனைத்துலக விசாரணையின் அவசியத்தை வலியுறுத்திய சர்வதேச மன்னிப்புச்சபை,  சிறிலங்கா காவல்துறையினரால் நடந்தேறும் வன்கொடுமைகள் குறித்து பிரஸ்தாபித்திருந்தது. இதேவேளை, நீதி தோற்றுப்போன நாடாக சிறிலங்காவை, சர்வதேச மன்னிப்புச் சபை விமர்சித்தது.

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலவரத்தைக் கையாள்வதற்கு அனைத்துலக பொறிமுறை அவசியம் குறித்து கருத்துரைத்த மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகளுக்கான சுதந்திரமான வெளியற்ற நாடாக சிறிலங்கா உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்தவர்களை சிறிலங்கா படையினர் அச்சுறுத்திய விடயத்தை மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவைகள் அமைப்பு வன்மையாகக் கண்டித்திருந்தது.