ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு, அமெரிக்காவுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்தப்பின் போதே அவர் இவ்வாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படைகள் கொடுமைகளை இழைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள கோத்தாபய ராஜபக்ச உலகின் முதன்மை சக்தியான அமெரிக்காவினால் ஏற்பட்டுள்ள அழிவுகள், மரணங்கள், உறுதியின்மை குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார்.
இதுகுறித்து நவநீதம்பிள்ளையிடம் சுட்டிக்காட்டிய போது, அவர் பதில் ஏதும் பேசாமல் வாயடைத்துப் போய் இருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இரண்டு தடவைகள் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுவே கோத்தாபாயவின் சீற்றத்துக்கு முக்கிய காரணமாகவுள்ளதாக கூறப்படுகின்றது.