கமல் தோழரின் நேர்மைத் திறனால் கவரப்பட்ட நிருபர்!


எதிர்வரும் வட மாகாண தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஊடாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற ஈ. பி. டி. பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமல் தோழர் என்று அழைக்கப்படுகின்ற கந்தசாமி கமலேந்திரனின் நேர்மைத் திறனை காட்டக் கூடிய பதிவு இது. அல் ஜசீரா தொலைக்காட்சியின் இலங்கை நிருபராக செயற்பட்டவர் ரியாஸ் அஹமட். இவர் சில மாதங்களுக்கு முன்னர் யாழ். மாவட்டத்துக்கு வந்து மக்களின் வாழ்க்கை நிலையை பார்வையிட்டமையுடன் அரசியல் தலைவர்கள், சிவில் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் போன்றோரை பேட்டிகள் கண்டார். இக்கால கட்டத்தில் இவருக்கு கமல் தோழருடன் மிக நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்புக் கிடைத்தது. கமல் தோழர் குறித்து இவர் எழுதிய ஊடக பதிவுகள் சுவாரஷியமானவையாக உள்ளன. “ கமல் தோழர் பார்வைக்கு கடுமைப் போக்காளர் போன்று தோன்றுகின்றார். இலகுவில் சிரிக்க மாட்டார். ஆனால் நெருங்கிப் பழகுகின்றமைக்கு இனிமையானவர். இளகிய மனம் கொண்டவர். இவரது நேர்மைத் திறன் என்னை வியக்க வைத்தது. யாழ்ப்பாணத்தின் மிக பிரபல ஐஸ் கிறீம் ஹவுஸ்களில் ஒன்று றியோ. வட மாகாணத்தில் மாத்திரம் அன்றி தென்னிலங்கையில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றார்கள். கமல் தோழர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆஸ்தான கவிஞர் சிவச்செல்வம் விந்தன் ஆகியோர் என்னை அழைத்துக் கொண்டு றியோவுக்கு சென்றார்கள்.

 
 றியோவில் ஒரே சனக் கூட்டம். கவுண்டரில் காசு கொடுத்து, பட்சணங்களுக்கு ஓடர் பண்ணிய பிற்பாடுதான் ஆசனங்களில் சென்று அமர வேண்டும். ஆனால் கமல் தோழர் கவுண்டரைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்று ஒரு ஆசனத்தில் அமர்ந்தார். நாமும் அவரை பின் தொடர்ந்தோம். சிப்பந்தி பையன் மேசைக்கு வர பட்சணங்களுக்கு ஓடர் பண்ணினார் கமல் தோழர். எனது மனதில் ஏராளம் சந்தேக கணைகள் இயல்பாகவே ஏற்பட்டன. நாம் உண்டு முடித்தோம். பில் வந்தது. நான் கூர்ந்து அவதானித்தேன். கமல் தோழர் பணப் பையில் இருந்து காசை எடுத்து கொடுத்தார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்காரர்கள் கப்பம் கோருகின்றார்கள், கட்டைப் பஞ்சாயத்து செய்கின்றார்கள், கடைகளில் தட்டிப் பறிப்புகள் மேற்கொள்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்று இச்சம்பவத்தின் ஊடாக நான் நேரில் கண்டு கொண்டேன். என் கண்கள் முன் உயர்ந்த மனிதராக கமல் தோன்றினார். ”