சிரியா யுத்தத்தின் நிஜ முகம்: எத்தனை எல்லை கடந்து எத்தனை நாடுகளுக்குள் சென்று..

சிரியா யுத்தத்தின் நிஜ முகம்: எத்தனை எல்லை கடந்து எத்தனை நாடுகளுக்குள் சென்று..
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா இல்லையா என்ற பரபரப்பு ஒருபக்கம் நிலவிக் கொண்டிருக்க, மறு பக்கத்தில் யுத்தம் காரணமாக சிரியாவில் இருந்து வெளியேறி அகதிகளாக உள்ள மக்களின் எண்ணிக்கை, 2 மில்லியனை தொட்டுவிட்டது. சமீப காலத்தில் உலக அளவில், சொந்த இடங்களில் இருந்து வெளியேறிய அகதிகளின் மிகப்பெரிய எண்ணிக்கை இதுதான்.

இதற்குமுன், 1994-ம் ஆண்டு ருவாண்டா நாட்டில் நடந்த இனப் படுகொலைகளின்போது வெளியேறிய பெருமளவு அகதிகளின் எண்ணிக்கைக்கு அடுத்தபடியாக உள்ளது சிரியா அகதிகளின் எண்ணிக்கை.

சிரியா தமது அயல் நாடுகளுடன் தரை எல்லையால் இணைக்கப்பட்டு உள்ளதால், இப்படி மில்லியன் கணக்கான அகதிகளால், சிரியாவை விட்டு வெளியேற முடிந்தது. இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில், அங்கு நான்கு புறமும் கடல் எல்லைகளாக இருந்ததால், அவர்களால் நாட்டை விட்டு வெளியேற முடிந்திருக்கவில்லை.

2 மில்லியன் சிரியா அகதிகளை பராமரிக்க, ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பும், இதர சேவை அமைப்புகளும் திணற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அகதிகளை பராமரிக்க 4.4 பில்லியன் டாலர் நிதி தேவை என கணிப்பிடப்பட்டுள்ளது. இதுதான், உலக அளவில் இன்றைய தேதிவரை அகதிகள் நிவாரணத்துக்காக தேவைப்படும் அதிகபட்ச தொகை.

யுத்த முனையில் இருந்து உயிர் தப்பி வெளியேறிய அகதிகள், தற்போது எங்கே, உள்ளார்கள்? அவர்களது வாழ்க்கை முறை எப்படி உள்ளது? ஆயிரம் வார்த்தைகள் கொண்டு விளக்குவதைவிட, கீழேயுள்ள இணைப்பில் உள்ள 17 போட்டோக்களை வைத்து விளக்க முயற்சித்திருக்கிறோம்.

சிரியாவில் யுத்த முனையில் இருந்து அகதியாக சிரியாவை விட்டு வெளியேறிய மக்கள், ஒரே நாட்டுக்குள் செல்லவில்லை. வெவ்வேறு நாட்டு எல்லைகளை கடந்து அந்தந்த நாடுகளுக்குள் சென்றுள்ளார்கள். இதுதான், மிகப் பெரிய பிரச்னை. சில சந்தர்ப்பங்களில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே வெவ்வேறு நாட்டு எல்லைகளை கடந்து, வெவ்வேறு நாடுகளில் தங்கியுள்ளார்கள்.

உதாரணமாக, 1-வது போட்டோவில் உள்ளவர்கள், சிரியா – துருக்கி எல்லையை கடந்து, துருக்கியின் தென்கிழக்கே கிலிஸ் நகரில் உள்ளார்கள். 2-வது போட்டோவில் உள்ளவர்கள், வடக்கு ஈராக்கில் உள்ள குர்திஷ் பகுதிக்குள் நுழைவதற்காக எல்லை அருகே பாலைவனத்தில் காத்திருக்கிறார்கள்.

பாலைவனத்தை கடந்து குர்திஷ் பகுதிக்குள் நுழைந்தால், இவர்களது வாழ்க்கையில் அடுத்த கட்டம் என்ன? 3-வது போட்டோவை பாருங்கள். குர்திஷ் பகுதியில் உள்ள அர்பில் என்ற நகரில் சிரியா அகதிகள் எப்படி தங்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள். சிரியாவில் இருந்து வெளியேறி, துருக்கி, ஈராக் ஆகிய நாடுகளுக்குள் சென்றவர்களை பார்த்து விட்டோம்.

அடுத்து, ஜோர்தானுக்குள் சென்றவர்களை பார்க்க வேண்டாமா?

அதற்குமுன். “மக்கள் மில்லியன் கணக்கில் வெளியேறினார்கள்” என்று சொல்லிவிட்டு, நாம் காண்பிக்கும் போட்டோக்களில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே ஆட்கள் உள்ளார்கள் என்று நினைக்கிறீர்களா? 5-வது போட்டோவை பாருங்கள்.

ஜோர்தான் நகரம் மஃப்ராக் அருகே சிரியா அகதிகள் தங்கியுள்ள அகதிகள் முகாமை வானில் இருந்து எடுத்த (ஏரியல் வியூ) போட்டோ இது. இதில் நடுவேயுள்ள வீதிக்கு கீழே உங்கள் கண்ணுக்கு தெரியும் அனைத்துமே, சிரியா அகதிகள் தங்கியுள்ள கூடாரங்கள்தான்!

யுத்தம் தொடங்கிய காலத்திலேயே வெளியேறிய அகதிகள் லெபனான் நாட்டுக்குள் சென்று, அங்குள்ள செக்கா என்ற நகரில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை 10-வது போட்டோவில் பாருங்கள்.

யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்களில் சிலர், வெளிநாட்டு வாழ்க்கை ஒத்துக்கொள்ளாமல் நாடு திரும்ப விரும்புவது வழக்கம். சிரியாவில் இன்னமும் அபாய நிலை இருக்கையில், அதை பொருட்படுத்தாமல் தமது தாய்நாடு செல்ல முயலும் ஆட்களை பார்க்க வேண்டுமா?

சிரியா அகதிகள், ஜோர்தானின் அல்-ஸாத்ரி அகதி முகாமில் இருந்து ஒரு ட்ரக்கில் ஏறி அடைந்து கொள்வதை, 11-வது போட்டோவில் பாருங்கள். சிரியா திரும்பியபின் இவர்களில் எத்தனைபேர் உயிருடன் இருப்பார்களோ!

அகதிகளை வரவேற்கும் அயல் நாடுகளுக்குள் செல்லும் அகதிகளுக்கு போலீஸ் பிரச்னை கிடையாது. ஆனால், அகதிகளை வரவேற்காத நாடுகளுக்குள் செல்பவர்களும் உள்ளார்களே.. 12-வது போட்டோவை பாருங்கள்.

சிரியாவில் இருந்து மசிடோனியா நாட்டுக்குள் சென்று, அங்கிருந்த எல்லை வழியாக செர்பியா நாட்டுக்குள் நுழைந்தபோது செர்பிய போலீஸிடம் அகப்பட்டு கொண்டவர்கள் 12-வது 13-வது போட்டோக்களில் உள்ளார்கள்.

இலங்கையில் நடந்த நீண்டகால யுத்தம் காரணமாக, சொந்த இடங்களை விட்டு வெளியேறிய லட்சக் கணக்கான ஈழத் தமிழர்களின் நிலைமைக்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

வாஷிங்டனிலும், டமாஸ்கஸ்ஸிலும், மாஸ்கோவிலும் இருந்து திட்டமிட்டு யுத்தம் நடத்தும் தலைவர்கள் யாருமே, இந்த வலியை உணர்ந்திருக்க மாட்டார்கள். ஒரு யுத்தத்தின் நிஜமான வலியை உணர வேண்டும் என்றால், அவசியம் ஒருமுறை இந்த போட்டோக்களை பாருங்கள். போட்டோக்களுக்கான லிங்க் கீழேயுள்ளது: