வாழ்வியலுடன் கூடியதான அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா




வாழ்வியலுடன் கூடியதான அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியவர்களை சரியாக இனங்கண்டு மக்கள் வாக்களிக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (31) இடம்பெற்ற உரும்பிராய் யோகபுரம் அண்ணா சனசமூக நிலையம் மற்றும் அண்ணா ஸ்ரார் விளையாட்டுக்கழக பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களின் வாழ்வியலுடன் கூடியதான அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்பதில் நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம். அந்தவகையில், நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் ஊடாக மக்களது வாழ்வியலும் அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வென்றெடுக்கப்படும். அதுமட்டுமல்லாது மாகாண சபை முறைக்கூடாகவே எமது மக்களது வாழ்வாதாரமும் மேம்பாடு அடையக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இது தேர்தல் காலம் என்பதனால் பல்வேறு உதவிகளையும் நிறைவேற்ற முடியாத உறுதிமொழிகளையும் வழங்கியவாறு பல்வேறு தரப்பினர் வாக்குகளை அபகரிக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுவதுடன், வாக்குகளை அபகரித்ததன் பின்னர் காணாமற் போய்விடுவர். இந்நிலையில் மக்களோடு இருந்து மக்களுக்காய் பணிசெய்பவர்களை மக்கள் சரியான முறையில் இனம் கண்டு அவர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். வடமாகாணசபைத் தேர்தலில் நாம் வெற்றிபெறும்


பட்சத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 5 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வடமாகாணத்தை செல்வங்கொழிக்கின்ற குட்டிச் சிங்கப்பூராகவோ, குட்டி ஜப்பானாகவோ நிச்சயமாக மாற்றியமைப்போம். இதற்கான அரசியல் அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கும் பட்சத்திலேயே அதுசாத்தியமாகுமெனவும் தெரிவித்தார். இதனிடையே குறித்த பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.