நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த தயார்: இலங்கை அரசாங்கம்

தன்னை சந்தித்த சிலர் அச்சுறுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த தயாராக இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தன்னை சந்தித்த மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்திருந்தார். முல்லைத்தீவில் கிராமங்கள் மற்றும் மீள்குடியேற்ற பகுதிகளுக்கு சென்று, மக்களை சந்தித்து விட்டு சென்ற பின்னர், பொலிஸாரும், இராணுவத்தினரும் தன்னிடம் பேசப்பட்ட மற்றும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரம்புக்வெல்ல, இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளுக்கு உத்தரவிட மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் உறுதிப்படுத்த கூடிய சாட்சியங்களை முன்வைக்க வேண்டும். அரசாங்கத்தை அவமதிப்புக்குட்படுத்த சில குழுக்கள், மனித உரிமை ஆணையாளரிடம் பேசியவர்களை அச்சுறுத்தியிருக்கலாம். சில குழுக்கள் தவறான நோக்கத்தில் பொய்யான தகவல்களை பிள்ளைக்கு அனுப்ப முயற்சித்திருக்கலாம். ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அவரது விஜயம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் அவர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறு. விரும்பிய இடத்திற்கு செல்லவும் விரும்ம்பியவர்களை சந்திக்கவும் பிள்ளைக்கு சுதந்திரம் வழங்கப்படடிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்தி கொண்ட சிலர் பொய்யான தகவல்களை அவருக்கு வழங்கியுள்ளனர். எனினும் ஒரு பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில், அவரது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருந்தால் அது பற்றி விசாரணைகளை நடத்தும் என்றார்.