மெஸ்சியின் அதிரடியில் பார்சிலோனா வெற்றி!


லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில்
வாலன்சியா அணியை எதிர்கொண்ட பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.

இதில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி அபார மூன்று கோல்களினால் இந்த வெற்றி சாத்திமாகியுள்ளது.

ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன' பார்சிலோனா, வாலன்சியா அணிகள் மோதின.

ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணிக்கு, மெஸ்சி (11, 39, 41வது நிமிடம்) "ஹாட்ரிக்' கோல் அடித்து அசத்தினார். இதற்கு, வாலன்சியா அணியின் போஸ்டிகா (45, 45+3) இரண்டு கோல் அடித்தார்.

இரண்டாவது பாதியில் கடைசி வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில், பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மூன்று கோல் அடித்த பார்சிலோனா வீரர் மெஸ்சி, இந்த ஆண்டு நடக்கும் லா லிகா தொடரில் "ஹாட்ரிக்' கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்சி (5 கோல்) முதலிடம் பிடித்தார். இவரைத் தொடர்ந்து, ரியல் மாட்ரிட் வீரர் இஸ்கோ (3), வாலன்சியாவின் போஸ்டிகோ (3) ஆகியோர் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.

ரியல் மாட்ரிட் அபாரம்

மற்றொரு போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் பில்பாவோ அணியை வீழ்த்தியது.

ரியல் மாட்ரிட் அணிக்கு இஸ்கோ (26, 72வது நிமிடம்), கிறிஸ்டியானோ ரொனால்டோ (45+1) ஆகியோர் கோல் அடித்தனர். அத்லெடிகோ பில்பாவோ அணிக்கு கோமஸ் (79) ஆறுதல் தந்தார்.

பிற போட்டிகளில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 2-1 என ரியல் சோசிடெட் அணியை வீழ்த்தியது. செவில்லா, மலகா அணிகள் மோதிய மற்றொரு போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது.