யாழ் இந்தியத் துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்காவினால் தொகுக்கப்பட்ட ‘தெறிப்புப் படிமம்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று(30.09.2013) திங்கட்கிழமை யாழ் இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்றது.
யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொண்டிருந்தனர் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மக்கள் பட்ட துன்பங்களை பிரதிபலிக்கும் கவிதைகள் பல இடம் பெற்றுள்ள இந்த புத்தகத்தில் ஈழத்து கவிஞர்களான பா.அகிலன், சோ.பத்மநாதன், சித்தாந்தன், சாந்தன், கருணாகரன் ஆகியோரது கவிதைகளும் சிங்களக் கவிஞரான ஆரியவன்ச ரணவீரவின் சிங்கள கவிதைகள் பல காணப்படுவதுடன் இவர்களது கவிதைகள் சிலவற்றை இவர்களாலேயே வாசிக்கப்பட்டது.
ஈழத்து கவிஞர்கள் தமது கவிதை வரிகளில் 1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வு மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலம், உள்நாட்டு போர் நடவடிக்கையின் போது மக்கள் பட்ட துன்பங்கள் மற்றும் பேரவலங்களை கவிதைகளாக கண்முன்னே கொண்டு வந்தனர்.