யாழ். மாநகர சபை ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி சாகும்வரை உண்ணாவிரதம்!

யாழ். மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி யாழ். மாநகர சபை முன்றலில் இன்று (01.10.2013) காலை 8 மணி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வரும் எமக்கு இதுவரை இரு தடவைகள் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றும் நிரந்தர ஊழியர்காளாக எம்மை உள்வாங்க இல்லை.
தற்போது உள்ள ஆணையாளர் மீண்டும் நேர்முக தேர்வு நடத்தியே எமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கின்றார் ஆனால் இதற்கு முன்னர் இருந்த இரண்டு ஆணையாளர்களும் எமக்கான நேர்முக தேர்வை நடத்தி இருந்தும் நிரந்தர நியமனத்தை வழங்கவில்லை தற்போது மூன்றாவது ஆணையாளராக உள்ளவரும் எமக்கு மூன்றாவது முறையாக நேர்முகத் தேர்வு வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு எமக்கான அடிப்படை கல்வித்தகுதி 8ம் ஆண்டாக இருந்தது ஆனால் தற்போது க.பொ.த. சாதாரண தரம் ஆக்கப்பட்டுள்ளது இதனால் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்படைய உள்ளதுடன் இன்று முதல் மாநகர சபையின் பாதுகாப்பு பிரிவினை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர் அதேபோல சுகாதார பொருளியல் பிரிவினையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான கேள்வி கோரல் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பாக யாழ் மாநகர சபை ஆணையாளரிடம் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்க முற்பட்ட போது, ஆணையாளர் யாரையும் சந்திக்க விரும்பவில்லை எனக்குறிப்பிட்ட அதே சமயம் இச்சம்பவம் பற்றி யாழ் மாநகர முதல்வரை தொடர்பு கொண்டபோது தான் கொழும்பில் நிற்பதாகவும் நாளையதினம் வந்து பார்த்துவிட்டு பதில் கூறுவதாக குறிப்பிட்டார்.