சந்தர்ப்பவாத அரசியலாளர்கள் இறந்தவர்களின் நெற்றிகளில் பொறிக்கப்பட்ட அரசொன்றைக் கட்டியெழுப்புவதற்கே முயற்சிசெய்கிறார்கள் என தேசிய சுதந்தர முன்னணி குறிப்பிடுகிறது.
அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கொழும்பு நகராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் அவர்களினால் இவ்வாறு குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் வருமாறு:
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாகாண சபைகளுக்குள் முழுமையாக செயற்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் நேற்று முன்தினம் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டு அது வெற்றிபெற்றுள்ளது. அது மிகப் பாரதூரமான காரியம் என்று குறிப்பிடுகின்றது தேசிய சுதந்திர முன்னணி. 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகள் என்பன பிரிவினைவாதத்திற்கு வழிகாட்டக்கூடியன என்பதே தேசிய சுதந்திர முன்னணியின் நிலைப்பாடாகும். தற்போது வடக்கு கிழக்கில் உள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் கூட பிரிவினைவாதத்தை போஷிப்பவை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் 13 இனை உள்ளது உள்ளவாறே செயற்படுத்தற்கு கிழக்கு மாகாண சபையில் கொண்டுவரப்பட்டுள்ள வெற்றிகண்டுள்ள பிரேரணையானது பயங்கரமானதாகும். நாங்கள் இதற்கு முன்னரும் பலமுறை சுட்டிக் காட்டியது என்னவென்றால், வடக்கு கிழக்கினை மீண்டும் ஒன்றிணைப்பதானது மீண்டும் ஈனியா வுடனான தமிழ் அரசு மற்றும் முஸ்லிம் அரசுத் துண்டங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வழிவகுப்பதாகும். பிரிவினைவாதத்துடனான யுத்தத்தை தோல்வியடையச் செய்து, பெற்றுக் கொண்டுள்ள வெற்றியை சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் அனுபவிக்கவிடாது, அவர்கள் அனைவரையும் மீண்டும் இருண்ட யுகத்திற்குள் பலாத்காரமாகத் தள்ளும் முயற்சியாகும்.
உண்மையில் உருவாக்க முயற்சிப்பது தமிழ் முஸ்லிம் துண்டங்கள் ஒன்றிணைந்த ஒரு அரசாங்கம். அது துயரத்தில் வாடும் தமிழனினதோ முஸ்லிமினதோ அரசாங்கம் அல்ல. அவர்களை துன்பத்திலிருந்து மீட்டெடுக்கும் அரசாங்கம் அல்ல. பிற ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்கு உருவாக்கப்படுகின்ற, இறந்தவர்களின் நெற்றிகளில் எழுதப்படுகின்ற, பழக்கப்பட்ட துயரங்களுக்குப் பதிலாக பாரிய துன்பங்களை ஏற்படுத்தக்கூடிய அரசாங்கமாகும்.
அந்த துயர்மிக்க அரசாங்கத்திற்கு அப்பாவி தமிழ் முஸ்லிம் மக்களை ஏமாற்றும் இனவாத அரசியல் சார்ந்த அரசியலாளர்கள் பற்றி ஏற்கனவே தேசிய சுதந்திர முன்னணி எதிர்வுகூறியுள்ளது. வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் பலமாக உரிமைகளைப் பெற்றுக் கொள்வதா? இல்லாவிட்டால், சின்னஞ் சிறு வேலிக்கம்பங்களுக்கிடையே நின்று கொண்டு பிற எதிர்பார்ப்புக்களுடன் பலியாகி கொன்றொழிக்கும் பூமியை இலக்காகக் கொள்வதா? என மக்கள் கட்டாயம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர் என்பதை தெளிவுறுத்துகிறோம்.
இதனை அரசியல் சட்டத்தின் மூலம் தர்க்க ரீதியான சட்டங்களின் மூலம் மட்டும் தெரிந்துகொள்ள முடியாது. தற்போதைய சூழ்நிலை, வரலாறு, எதிர்காலம் அனைத்தையும் எடுத்துநோக்கினால்தான் இதுபற்றிய தெளிவைப் பெறலாம், முடிவெடுக்கலாம். அந்த முடிவைச் சரிவர எடுக்காதவிடத்து, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் சமூகம் பெரும் பாதிப்புக்களைச் சந்திக்க வேண்டிவரும். அவர்களின் தலைவர்களாகக் காட்சிகொடுக்கின்ற இந்த சந்தர்ப்பவாதிகள் பற்றி எங்களுக்கு நினைவுக்கு வருவது என்னவென்றால், கோழிப்பண்ணையொன்றுக்குப் பொறுப்பாக வெளி எல்லையில் நிற்கின்ற நரிகள் அந்த கோழிப்பண்ணையின் உரிமையைப் பெறுவதற்காக எடுக்கின்ற முயற்சியாகும்.
நியாயமற்ற அரசியல் திட்டமொன்றுடன் தங்களது சூழ்ச்சிக்குள் சிக்கவைக்க முயல்கின்ற இந்த பிரிவினைவாதிகள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி ஆச்சரியப்படுவதில்லை. அத்துடன், அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, சகல வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு எதிரியாக நின்று யோசனைகளை முன்வைக்கின்ற இவர்கள் பற்றி எங்களுக்கு வெறுப்பு மட்டுந்தான் உண்டு. அரசியலுக்காக என்றும் பிரிவினைவாதிகளுடன் நின்றுகொண்டு, இலங்கையரின் வாக்குகளால் அன்றி மேற்கத்தேயவரின் வாக்குகளால் பலத்தை பெற எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி விடயத்தில் எங்களுக்கு அநுதாபமே ஏற்படுகின்றது. குறித்த பிரேரணைக்காக வாக்களித்த ஆட்சியாளர்கள் விடயத்திலும் நாங்கள் சற்றுக் கவலையுறுகிறோம். மாகாண சபை தொடர்பில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைக் கூடக் கருத்திற் கொள்ளாமல், அதனால் ஏற்படும் பாரதூர விளைவுகள் பற்றிச் சிந்திக்காது அவர்கள் எடுத்த முடிவானது பிரிவினைவாதத்திற்கு எதிரான தங்களது தலைமைத்துவத்தையும், அரசையும் நிலைகுலையச் செய்வதாகும்.
எது எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கு இரு மாகாணங்களிலும் அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அனைத்தையும் மீண்டும் அநாதையில்லங்களில், காப்பகங்களில் இட்டுச் செல்லும் இந்த ‘தனியரசு’ நாடகம் தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி ஆவன செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி எதிர்பார்க்கிறது என்பதை கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்.
(கலைமகன் பைரூஸ்)