கொழும்பு - கிளிநொச்சி ரயில் சேவை 14ம் திகதி முதல் ஆரம்பம் இரண்டாவது பரீட்சார்த்தமும் வெற்றி
28 வருடங்களின் பின்னர் கொழும்பில் இருந்து கிளிநொச்சி வரையான யாழ்.தேவி ரயில் சேவை எதிர்வரும் செப்டம்பர் 14ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.
இதற்கு முன்னோடியாக ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரை இரு தடவைகள் பரீட்சார்த்த ரயில் சேவை வெற்றிகரமாக இடம்பெற்றன.
ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்குமிடையிலான 62 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை இந்திய இர்கொன் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதை ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படஉள்ளது.
1989 ஜனவரி 19ம் திகதி கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் வைத்து வடபகுதி ரயில் பாதை புலிகளினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 28 வருடங்களாக வடபகுதி ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.
வடக்கு மீட்கப்பட்ட பின் மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதை மீளமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த வருட நடுப்பகுதியில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளதோடு தற்பொழுது ஓமந்தை வரை ரயில் சேவைகள் இடம்பெறுகின்றன. மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் வடபகுதிக்கான ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.