சிரியா மீது தாக்குதல் நடத்த பிரான்ஸ், இஸ்ரேல் ஆதரவு

பாரிஸ்: சிரியா நாட்டின் மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்கு ஆதரவளிக்க, பிரான்ஸ் முன் வந்துள்ளது. சிரியா நாட்டில், அதிபர் பஷர்-அல்-ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும் படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும் படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத சப்ளை செய்து வருகின்றன. இதனால், சிரியாவில், தொடர்ந்து, சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில், 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 7 லட்சம் பேர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். ரசாயன ஆயுதம் : சிரியா நாட்டுக்கு, ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள், ஆதரவளித்து வருகின்றன. சிரியா ராணுவத்துக்கு, ரஷ்யா, நவீன ஆயுதங்களை வினியோகம் செய்து வருகிறது. இதனால், சிரியாவுக்கு எதிராக, ஐ.நா., பாதுகாப்பு சபையில் ஒரு மனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் தேதி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர். ரசாயன குண்டு வீச்சில், நச்சு புகை பரவி, 1,300 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை ரசாயன குண்டு பயன்படுத்தியதற்கான தடயம் கிடைக்கவில்லை. சர்வதேச விதிகளை மீறி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக, மற்ற நாடுகளின் ஆதரவை, ஒபாமா திரட்டி வருகிறார். பிரிட்டன் ஆதரவில்லை : சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பார்லிமென்ட்டின் ஒப்புதலை கோரினார். எம்.பி.,க்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தால், இது தொடர்பாக ஓட்டெடுப்பு நடந்தது. பிரிட்டன் பிரதமர் கொண்டு வந்த தீர்மானம், 13 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இதையடுத்து, பார்லிமென்ட்டை மீறி, அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்க முடியாத சூழல் உள்ளதாக, பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார். பிரான்ஸ் ஆதரவு : "சிரியா விஷயத்தில், பிரிட்டனின் ஆதரவு கிடைக்கா விட்டாலும், அமெரிக்காவின் முயற்சிக்கு, பிரான்ஸ் பக்கபலமாக இருக்கும்,'' என, பிரான்ஸ் அதிபர் ஹோலன்ட் உறுதியளித்துள்ளார். இதே போல, சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு, இஸ்ரேல் நாடும் ஆதரவு தெரிவித்துள்ளது. சிரியாவின் நட்பு நாடு என்ற முறையில், ரஷ்யா, தன் பங்குக்கு, நீர்முழ்கி கப்பல் எதிர்ப்பு கப்பல்களையும், ஏவுகணை தாங்கிய கப்பல்களையும், அனுப்ப திட்டமிட்டுள்ளது