ஓமந்தை சோதனைச் சாவடியில் பரிசோதனைகள் நிறுத்தம்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பெருநிலம் இருந்தபோது, பிரதான சோதனைச் சாவடியாக இருந்த ஓமந்தையில் இன்று நண்பகல் முதல் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக வன்னி ஆயுதப்படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஓமந்தை சோதனைச் சாவடியில் பொதுமக்களுக்கு பிரயாணத்தின்போது, சிரமங்களைக் கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பரிசோதனை நடவடிக்கைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில், வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில் முக்கிய பிரயாணப் பாதையாக விளங்கிய ஓமந்தையில், பயணிகளின் பிரயாணப் பொதிகள் சோதனையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், வடக்கிலிருந்து தெற்கிற்கு எடுத்துச் செல்லப்படும் விளையாட்டுப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என்பன சந்தேகத்திற்கு உரியதாக இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும். ஆனால் பழைய இரும்புப் பொருட்கள், கழிவு இரும்புகள் என்பவற்றைச் சோதனையிடுவது நிறுத்தப்படவில்லை. இந்தத் தளர்வு நடவடிக்கையையடுத்து, ஓமந்தை சோதனைச் சாவடி படிப்படியாக அகற்றப்படும் என வன்னிக் கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா மேலும் குறிப்பிட்டார்