சிரியா... நீ செய்வது சரியா


வளைகுடா நாடுகளில் பற்றி எரிந்த "ஜனநாயக தீ' , மத்திய தரைக்கடல் நாடான சிரியாவில் பல மாதங்களாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் அதிபர், சர்வாதிகார கரம் கொண்டு இந்த தீயை அணைக்க பார்க்கிறார். அந்நாட்டு ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன.

சிரியா பழமையான வரலாறு கொண்ட நாடு. கி.மு., 3000ம் ஆண்டு முதல் எகிப்தியர், சுமேரியர், ஆரியர், பாபிலோனியர், பாரசீகர் என பலர் ஆட்சி செய்துள்ளனர். கி.பி., 640ம் ஆண்டு முகலாயர்கள் கைப்பற்றினர். பின் பிரெஞ்சுக்காரர்களின் நாடு பிடிக்கும் ஆசையில் சிரியா சிக்கியது. 1946ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் சுதந்திரம் அளித்தனர். 1961ம் ஆண்டு வரை எகிப்தின் ஒரு பகுதியாகவே சிரியா விளங்கியது. 1961 செப்.28ல் தனி நாடாக மலர்ந்தது. 1970ம் ஆண்டு முதல் "பாத்' எனும் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சிரியா ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டது. இதனால் ஒரே குடும்பத்தின் ஆட்சியே நடந்து வருகிறது. 1970-2000 வரை ஹபிஸ் அல் அசாத் என்பவர் ஆட்சி செய்தார். அவருக்கு பின் அவரது மகன் பஷர் அல் அசாத் ஆட்சிக்கு வந்தார். அதன் பிறகு, ஜனநாயகத்துக்காக போராடிய அனைத்து குழுக்களும் முடக்கப்பட்டன.

2011ம் ஆண்டு சில அரேபிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சி புரிந்த அதிபர்களுக்கு எதிராக புரட்சி வெடித்தது. இப்புரட்சி துனீசியா, லிபியா போன்ற நாடுகளில் ஜனநாயகம் தழைக்க வழி செய்தது. இதன் காரணமாக ஜனநாயகத்தை விரும்பிய சிரியா நாட்டு போராட்ட குழுக்களும், புரட்சியில் குதித்தன. 2011ம் ஆண்டு உள்நாட்டுப்போர் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அதிபர் அசாத்தும், அவரது ஆட்சிக் குழுவினரும் "அலாவைட்' எனும் பிரிவை சார்ந்தவர்கள். சிரியாவில் இப்பிரிவினர் 10 சதவீதம் மட்டுமே. 75 சதவீதம் பேர் வேறு பிரிவை சேர்ந்தவர்கள். உள்நாட்டுப் போருக்கு இதுவும் ஒரு காரணம்.

உள்நாட்டு போரில் அதிபரின் ராணுவம், மனிதத் தன்மையை மறந்து செயல்படுகிறது. உலக நாடுகள் சிரியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இஸ்லாமிய கூட்டமைப்பில் இருந்தும் சிரியா வெளியேற்றப்பட்டது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலும் பலமுறை எச்சரித்தாகிவிட்டது. எதையும் சிரியா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ரஷ்யாவும், சீனாவும் மட்டுமே சிரியாவுக்கு ஆதரவளித்து வருகின்றன. சிரியாவின் உள்நாட்டு விவகாரத்தில், எந்த நாடும் தலையிடக் கூடாது என தெரிவிக்கின்றன. இப்போரினால் அண்டை நாடுகளான ஈராக், ஜோர்டான், துருக்கி, லெபனான் உள்ளிட்ட நாடுகளிலும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. தற்கொலைப்படை தாக்குதலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதனால் தீவிரவாத இயக்கங்களுக்கும், இந்தப்போரில் பங்கிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ரசாயன குண்டு தாக்குதல்:


எந்த போரிலும் ரசாயன குண்டுகள் பயன்படுத்தக் கூடாது என்பது, பெரும்பாலான நாடுகள் பின்பற்றும் விதிமுறை. இது மனித சமுதாயத்திற்கு எதிரான கொடூரமான செயல் என்பதாலேயே இந்த ஏற்பாடு. ஆனால் இதையும் மீறி, சமீபத்தில் சிரிய ராணுவத்தினர் நடத்திய ரசாயன குண்டு வெடிப்பு தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்தனர். தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள அயர்ன் டர்மா, சமால்கர், ஜோபர் ஆகிய பகுதிகளில் ஆக.21ல், அதிகாலை 3 மணி அளவில் இந்த கொடூர ரசாயன குண்டு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. நுரையீரலுக்குள் நச்சுப் பொருட்கள் பரவி, நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்ததால், சம்பவ இடத்திலேயே கொத்துகொத்தாக, பலர் துடிதுடித்து பலியாயினர்.

கண்டனம்:


இச்சம்பவத்திற்கு ஐ.நா.,வும், பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் சிரியா, பழியை புரட்சியாளர்களின் மீது சுமத்தியது. தாக்குதல் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஆனால் சம்பவ இடத்தில், ஆய்வு மேற்கொள்ள அனுமதி தர முடியாது எனவும் சிரியா தரப்பில் கூறப்பட்டது. ராசாயன தாக்குதல் குறித்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் கலந்து பேசினார் அமெரிக்க அதிபர் ஒபாமா. முடிவில், ராணுவ நடவடிக்கை மூலம், சிரிய ராணுவத்திற்கு பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி அமெரிக்க விமானம் தாங்கிய போர்க்கப்பல்கள், சிரியா நோக்கி சென்றுள்ளன. அப்பாவி மக்கள் மீது, ராசாயன குண்டு மூலம் தாக்குதல் நடத்திய, சிரியா மீது கரிசனப்பார்வை கூடாது. ராணுவ தாக்குதல் தொடுத்தாக வேண்டும் என பல உலக நாடுகள் கங்கணம் கட்டியுள்ளன. ஐ.நா.,வின் அனுமதி தேவையில்லை எனவும் அறிவித்துள்ளன.

கலவரம் நடக்க காரணம்:


சிரியாவில், அதிபர் பஷர் அல்-அசாத் குடும்பம், 35 ஆண்டுகளாக அந்நாட்டை ஆண்டு வருகிறது. ஆட்சியை விட்டு அதிபர் விலக, மக்கள் பொறுமை காத்தனர். அது நடக்காத காரணத்தால், அதிபர் பதவி விலகக் கோரி கிளர்ச்சியாளர்களுடன் பொதுமக்களும் இணைந்து போராட்டத்தை துவக்கினர். உள்நாட்டு போருக்கு இதுவே முக்கிய காரணம்.

ஆதரவு நாடு:


சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா குரல் கொடுத்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிராக, சிரியா, ரசாயன குண்டு பயன்படுத்துவதாக கூறி, அமெரிக்கா அந்நாட்டு உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது. அவ்வாறு தலையிட்டால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என, ரஷ்யா, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது.


பாதிப்புகள் என்ன




சிரியா தாக்கப்பட்டால், அந்நாடு மட்டுமல்லாது, இந்தியா உட்பட பல நாடுகளும் மறைமுகமாக பாதிக்கப்படும்.

* உலக அளவில் பொருளாதாரம் சீரழியும்

* கச்சா எண்ணெய் விலை உயரும்

* கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும்

* கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியா போன்ற நாடுகள் பெட்ரோல் இறக்குமதிக்கு அதிகம் செலவழிக்க நேரிடும்.

* இறக்குமதி அதிகரித்து, இந்திய ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும்

* இந்தியாவில் விலைவாசி உயரும்

* அமெரிக்க ஆதரவு, ரஷ்ய ஆதரவு என உலக நாடுகளிடையே மீண்டும் பிளவு ஏற்படும்.