மூன்று நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து வேலை செய்த மாணவன் மரணம்

பிரிட்டனில் 72 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றிய பல்கலைக்கழக மாணவர் மன இறுக்கத்தால் உயிரிழந்தார். பிரிட்டனை சேர்ந்தவர் மோரிட்ஜ், 21. இவர், அமெரிக்காவின், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில், பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். படிப்பின் ஒரு பகுதியாக, அனுபவ ரீதியான கல்வி அறிவு பெறுவதற்காக, அங்குள்ள பல்வேறு வங்கிகளுக்கும், பல்கலைக்கழக மாணவர்கள் பணியாற்ற அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வகையில், மோரிட்ஜ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், லண்டனில் உள்ள, "பேங்க் ஆப் அமெரிக்கா´வில் பணியாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பணி நேரத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, மோரிட்ஜ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், தொடர்ந்து, மூன்று நாட்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டும் என, மோரிட்ஜுக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் தண்டனை அறிவிக்கப்பட்டது. பல்கலையின் ஆணையை பின்பற்றாமல் போனால், பட்டம் கிடைக்காது என்ற பயத்தில், மோரிட்ஜ் தொடர்ந்து, மூன்று நாட்கள் பணியாற்றினார். இரவு, பகல் பாராமல் தொடர்ந்து வேலை பார்த்ததால், மோரிட்ஜ் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மூன்று நாட்களுக்குப் பின், மோரிட்ஜ் தன் நண்பர்களுடன் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு சென்று ஓய்வெடுத்தார். அன்று காலை, சக நண்பர்கள் அலுவலகம் சென்று, மாலை வீடு திரும்பினர். அப்போது வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், அதிர்ச்சி அடைந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, குளியல் அறையில் மோரிட்ஜ் பிணமாகக் கிடந்தார். அங்கு வந்த பொலிசார், மோரிட்ஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து, மோரிட்ஜுடன் தங்கியிருந்த நண்பர்கள் கூறுகையில், "மோரிட்ஜ் செய்த சிறு தவறை பயன்படுத்தி, பல்கலைக்கழக நிர்வாகமும், வங்கி அதிகாரிகளும், அவரை கொடுமைப்படுத்தி விட்டனர். தொடர்ந்து உழைத்ததால் மன இறுக்கம் ஏற்பட்டு, இதயம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்துள்ளார்´ என்றனர்.