மாவட்டத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 15 நிமிடத்தில் மடிக்கணினியை கழற்றி மாட்டி சாதனை படைத்துள்ளார்.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பிரபு மகாலிங்கம் என்பவர் கணினி சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஆதர்ஷினி(8) இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தேவம்பாளையம் இந்தியன் பப்ளிக் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறாள்.
கோடை விடுமுறையில் அப்பாவின் கடைக்கு சென்றிருந்த ஆதர்ஷினி கணினியை பிரித்து அப்பா சர்வீஸ் செய்வதை உன்னிப்பாக பார்த்தாள். மகளின் ஆர்வத்தை கவனித்த பிரபுமகாலிங்கம் அவருக்கு தொடர்ந்து 15 நாட்கள் கணினியை கழற்றி மாற்றுவது குறித்து பயிற்சி அளித்தார்.
அதன் பின்பு கடையில் இருந்த மடிக்கணினியை சிறுமி தானே கழற்றி மாட்டி அசத்தினாள். மாணவியின் திறமையை கண்டு பள்ளி ஆசிரியர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
இந்நிலையில் அரியானா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு ஆதர்ஷினி பெயரை பள்ளி நிர்வாகம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன பொறுப்பாளர் விவேக்ராஜா, சிறுமியின் தாத்தாவும் முன்னாள் துணை மாவட்ட ஆட்சியருமான மகாலிங்கம் ,பள்ளி சேர்மன் அசோக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் 18.47 நிமிடத்தில் ஒரு மடிக்கணினியை கழற்றி மாற்றினாள் ஆதர்ஷினி.
அதைவிட குறைவான நேரத்தில் சிறுமியால் இதனை செய்ய முடியும் என்ற அவளது தன்னம்பிக்கையை பாராட்டி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தது சாதனை நிறுவனம். இதனை தொடர்ந்து 15.23 நிமிடத்தில் மடிக்கணியை கழற்றி மாட்டி சாதனை படைத்ததன் மூலம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் ஆதர்ஷினி இடம் பிடித்தாள்.
இது குறித்து சிறுமி கூறுகையில், கணினியை அப்பா சர்வீஸ் செய்வதை பார்த்து எனக்குள் ஆர்வம் ஏற்பட்டது. 15 நாட்கள் இடைவிடாது முயற்சி செய்து அதன் நுட்பத்தை தெரிந்து கொண்டு இந்த சாதனையை படைத்துள்ளேன்.
தற்போது செய்த சாதனையை காட்டிலும் மிக குறைவான நேரத்தில் செய்து மற்றொரு சாதனை படைப்பேன் என கூறினார்.