16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சாமியார் அஸரம் பாபு, ஜோத்பூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அங்கு ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நள்ளிரவில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் கைது செய்யப்பட்டார் அஸரம் பாபு.
இதையடுத்து இரவே அவரை இந்தூர் விமான நிலையம் கொண்டு சென்று பலத்த பாதுகாப்புடன் தங்க வைத்தனர். பின்னர் இன்று பிற்பகல் வாக்கில் அவரை விமானம் மூலம் ஜோத்பூர் கொண்டு வந்தனர். ஜோத்பூரில் ரகசிய இடத்தில் அவரை தற்போது தங்க வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீஸார்.
காவல் நிலையம் ஒன்றில் அவர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஜோத்பூர் அருகே உள்ள அவரது ஆசிரமத்திற்கும் நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிகிறது. அஸரம் பாபு கைது செய்யப்பட்டுக் கொண்டு வரப்பட்டிருப்பதால் ஜோத்பூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது ஆசிரமம் ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு விட்டது.