சருமம் பள பளக்கComplete-Tips-for-beautiful-skin-In-tamill-alakukurippu

நமது உடலை மூடியிருக்கும் தோல் அழகுக்காக மாத்திரம் அல்ல, உடலில் கிருமிகள் தாக்காமலும், உள்ளுறுப்புகளுக்கு அடிபடாமலும், உடல் நீர்ச்சத்தை இழக்காமல் பாதுகாப்பதற்கும் உதவுகிறது. இதை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்கவேண்டியது அனைவரின் கடமை. இதற்காக இயற்கை பல பொருட்களை நமக்கு அளித்துள்ளது. எளிமையான முறையில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

இருமுறை குளியல்

கோடை காலத்தில் உடலில் வியர்வையும், பிசுபிசுப்பும் அதிகம் காணப்படும். எனவே தினமும் இருமுறை குளிப்பது அவசியம் . இதனால் வியர்வை, அழுக்கு நீங்கும். செம்பருத்தி இலைகளை பறித்து அவற்றை நன்கு கசக்கி உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் போகும். வாரம் ஒரு முறை நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள் தூளை போட்டு குழைத்து உடலில் தடவி, பயற்ற மாவு தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும். கோடையில் கழுத்து, முழங்கை ஆகிய இடங்கள் கருத்துவிடும். அந்த இடங்களில் எலுமிச்சை சாறை தடவி 10 நிமிடங்கள் வைத்து கழுவிவிடவும். குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

வியர்க்குரு நீங்க

கோடையில் வியர்க்குரு வருவதனால் அரிப்பு ஏற்படும். இவற்றை போக்க நுங்கின் சதைப்பகுதியை நன்கு தேய்த்து ஊறிய பின் குளிக்கவும். கற்றாழை சாற்றையும் தேய்த்து குளிக்கலாம்.

சந்தனத்தூள், பன்னீர், பால் கலந்து முகத்திலும், உடல் முழுவதும் பூசி, 10 – 15 நிமிடம் கழித்து குளிக்கவும். ஆலிவ் எண்ணையும் சேர்த்துக் கொள்ளலாம். இதே போல் மஞ்சள், பாலேடு கலந்து உடலில் பூசி குளிக்கலாம். ரோஜா இதழ்களை அரைத்து பாலேடு கலந்து சருமத்தில் பூசி குளிக்கலாம் சருமம் மென்மையாகும்.

உள்ளாடைகள் சுத்தம்

கோடையில் பருத்தி உள்ளாடைகளே சிறந்தவை. இரவில் தளர்வான உடைகளை அணியவும். எப்பொழுதும் தோலுடன் ஒட்டி இருப்பதால் உள்ளாடைகளை சுத்தமாக வைக்கவும். மற்றவர்கள் உபயோகப்படுத்தும், துண்டு, சோப்பு வகைகளை உபயோகிக்க கூடாது. உங்களுடையதையும் பிறருக்கு கொடுக்கவேண்டாம் தோல் வியாதிகள் ஏற்படும்.

சுருக்கத்தை தவிர்க்க

வயது ஏற ஏற சருமத்தில் சுருக்கம் விழுவதை தடுக்க முடியாது. ஆனால் தள்ளிப் போடலாம். சருமத்தில் நீர் சத்து குறைந்து சுருக்கம் விழ ஆரம்பித்தால் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும். இது சோடியம் குறைபாட்டை போக்குவதால், சுருக்கங்களை நீக்கும். தேனை தண்ணீருடன் சேர்த்து காலையில் குடித்தால், சருமம் மிருதுவாகி பளபளக்கும்.

ஆலிவ் எண்ணை, பாதாம் எண்ணை இவை சுருக்கத்தை தவிர்க்கும். ரிபோபிலேவின் சத்துள்ள உணவை அதிகம் உட்கொண்டால் தோல் சுருக்கங்கள் விழாமல் தவிர்க்கலாம். தோலும் மிருதுவாக இருக்கும். கோடை காலத்தில் தினசரி குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். சொறி, சிரங்கு போன்றவைகளை போக்க உணவில், முளை கட்டிய தானியங்கள், பார்லி, தக்காளி, பசலை கீரை அத்திப் பழம் போன்றவற்றை உபயோகிக்கவும். வாரத்தில் 2, 3 முறை கேரட், வெள்ளை முள்ளங்கி இவற்றின் சாற்றை குடித்து வந்தால் மேனி அழகு பெறும்.

வைட்டமின் பாதுகாப்பு

வைட்டமின் ஏ, சி அடங்கிய உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமம் ஆரோக்கியமடையும்.

வைட்டமின் இ, சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. வைட்டமின் இ உள்ள கொட்டைகள், விதைகள், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் தாவிர எண்ணைகள், முளை கட்டிய தானியங்கள் கோதுமை, அரிசி போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சருமம் பளபளப்பாகும்.

வைட்டமின் ஏ, உள்ள உணவுகள் பால், முட்டைகள், லிவர், முளைகட்டிய தானியங்கள், முளை, பச்சைக்காய்கறிகள் கேரட், பரங்கி பூசணிக்காய், கீரைகள், பப்பாளி, மாம்பழம் முதலியவைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சருமம் பளபளப்பாகும்.

வைட்டமின் சி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது. அதனால் சரும கோளாறுகளை தடுக்கிறது. நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை முதலியவைகளை உண்ணவேண்டும். சரும நோய்கள் தடுக்கப்படும்.

விட்டமின் பி உள்ள உணவுகள் கோதுமை, அரிசி, இதர தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். வைட்டமின் – பி, சருமத்தில் மாசு, மருக்கள், வராமல் பாதுகாக்கும்.

மன அமைதி அவசியம்

சருமத்தை ஆரோக்கியமாக காப்பதில் மன அமைதி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒய்வு, ஆழ்ந்த உறக்கம் இவை உடல் புத்துணர்ச்சி பெறச் செய்கின்றன. எனவே மன அழுத்தம் இன்றி அமைதியாக இருந்தால் சருமமும் ஆரோக்கியமாக ஒளிரும்.