இலங்கையில் நடை பெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான விடு தலைப்புலிகள் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்காமல் தப்பிச் சென்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் பம்மல் பகுதியில் தங்கி இருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கியூ பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் விடுதலைப்புலிகள் தங்கியிருந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கிருஷ்ணமூர்த்தி, உதயதாஸ், மகேஸ்வரன், சுரேஷ்வரன் ஆகிய 4 விடு தலைப்புலிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் தங்கியிருந்த மற்ற விடுதலைப்புலிகளான சிவநேஸ்வரன், மகேஸ்வரன் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். கடந்த 8 மாதங்களாக இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் கியூ பிரிவு துணை சூப்பிரண்டு பவானீஸ்வரி தலைமையிலான போலீசார் தலை மறைவாக இருந்த 2 விடு தலைப்புலிகளையும் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே முகப்பேரில் சிவனேஸ்வரனும், மகேஸ்வரனும் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் விடுதலைப்புலிகள் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்த போலீசார் சிவனேஸ்வரனையும், மகேஸ்வரனையும் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இரு வரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்திய போலீசார் செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளனர்.
2 விடுதலைப்புலிகள் பற்றியும் போலீஸ் விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:–
சிவனேஸ்வரன் அரசியல் பிரிவு நிர்வாகியாகவும், மகேஸ்வரன் போர் படையிலும் பணியாற்றி வந்துள்ளனர். இறுதிக் கட்ட போரின்போது, சிவனேஸ்வரன் 2009–ம் ஆண்டும், மகேஸ்வரன் 2010–ம் ஆண்டும் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.
பின்னர் தங்களைப் போல தப்பி வந்த 4 விடு தலைப்புலிகளையும் ஒருங்கிணைத்து பம்மலில் ஒரே வீட்டில் தங்கினர். போலீஸ் பிடி இறுகியதால் அப்போது இவர்கள் இருவர் மட்டும் தப்பிச் சென்று விட்டனர். இதன் பின்னர் திருச்சியில் பதுங்கி இருந்த சிவனேஸ்வரனும், மகேஸ்வரனும் அடிக்கடி சென்னைக்கு வந்து சென்றுள்ளனர். ஈழத்தமிழர்களை கொன்று குவிந்த இலங்கை அரசை பழிக்குப்பழி வாங்கும் வகையில் இலங்கையில் மிகப் பெரிய குண்டு வெடிப்பை நிகழ்த்தவும் 2 பேரும் திட்ட மிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.