இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் கிடைத்த இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை சுழற்சி முறையில், முதலாவதாக ஒரு பெண்மணிக்கு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
வடமாகாண சபைக்குரிய போனஸ் இடங்களில் ஒன்றை பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு வருடாந்த சுழற்சி முறையில் அளிப்பது என்று கூட்டமைப்பு இன்று அதிகாரபூர்வமாக முடிவெடுத்துள்ளது.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட மேரி கமலா குணசீலன் என்பவருக்கு முதலாம் ஆண்டு அந்த இடத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இரண்டு போனஸ் இடங்களில் ஒன்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தபடி, மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அஸ்மின் அயூப் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மாகாண அமைச்சர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது தொடர்பான முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாகாணசபையின் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் எங்கு வைத்துப் பதவிப் பிரமாணம் செய்வது என்பது குறித்தும் பின்னர் கூடித் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.