சிறிலங்காவில் முஸ்லிம் தீவிரவாதத்தை ஊக்குவிக்க சதி முயற்சி: கோத்தபாய!

இலங்கை பூராவும் முஸ்லிம் தீவிரவாதத்தை ஊக்குவித்து நாட்டை நாசப்படுத்தும் முயற்சிகளில் சில சக்திகள் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஆனாலும் அவ்வாறான எந்தவொரு முயற்சிக்கும் இங்கு அனுமதியில்லை. அவ்வாறான சதித்திட்டங்களை முறியடிப்பதற்கான திட்டங்களை பாதுகாப்பு தரப்பு முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மோதல்களுக்கு பின்னரான காலத்தில்...

இலங்கையின் பாதுகாப்பு தரப்பினரின் செயற்திட்டங்கள் தொடர்பில் சர்வதேசரீதியில் விளக்கங்களையும், விரிவுரைகளையும் வழங்கும் முகமாக, கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கினை நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மேற்கத்தைய நாடுகள் தமக்கு ஒத்திசைவான நாடாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றனர்.



அதற்கான அழுத்தங்களை போலியான குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்துவதன் மூலம் வழங்க முனைகின்றனர். ஆனாலும், அவற்றுக்கு இலங்கை தலை வணங்காது என்றார். இலங்கையில், சீனாவின் செயற்பாடுகள் பற்றி தொடர்ந்தும் முன்வைக்கப்படுகின்ற தவறான கருத்துக்களினாலேயே, இலங்கைக்கும்- சீனாவுக்கும் இருக்கின்ற இணக்கமான உறவு பலருக்கு அச்சுறுத்தலாக தெரிகின்றனது.



இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலிருக்கின்ற உறவு பொருளாதாரம் மற்றும் இராஜதந்திர ரீதியிலானவையே. அத்தோடு, சீனா இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வந்த நாடு. எனவே, சீனாவுடனான உறவை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கோத்தபாய மேலும் தெரிவித்துள்ளார்.