மத்தாப்பூ விமர்சனம் -பொம்பளப் புள்ளைங்க கொஞ்சம் உஷாரா இருக்கணும்!

மத்தாப்பூ விமர்சனம் -பொம்பளப் புள்ளைங்க கொஞ்சம் உஷாரா இருக்கணும்!

பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால நம்மளோட அறியாத வயசு புரியாத வயசுல ஒரு படம் வந்துச்சுங்க… படத்துக்கு பேரு தினந்தோறும். இந்தப் படத்துல முரளி ஹீரோவா நடிச்சிருந்தாரு. இந்தப் படமும் பார்க்கிறதுக்கு நல்லாத்தான் இருந்துச்சு. இந்தப் படத்தை இயக்கின இயக்குநர் நாகராஜ்ம் இந்த படத்தில ஒரு கேரக்டர்ல நடிச்சிருப்பாரு. இந்தப் படத்தைப் பார்க்கிறப்போ முரளி, ஹீரோயின் இவங்க எல்லாரையும் விட நமக்கு பிடிச்சது நாகராஜைத்தான். ஏன்னா, படத்தில இவருக்கு பேசுற ஒவ்வொரு டயலாக்கும் இவரை நமக்கு பிடிச்சுப் போக வெச்சிது. நமக்கு மட்டுமல்ல, நிறைய பேருக்கு. அதுக்கு அப்புறம் இவரோட பெயர் வெறும் நாகராஜ்ங்கிறது மாறி தினந்தோறும் நாகராஜ்ன்னு மாறிப் போச்சு. தமிழ் சினிமாவில ஒரு ரவுண்டு வருவார்ன்னு நெனச்சேன்ங்க… ஆனா பாருங்க மனுஷன் உட்கார்ந்து ரவுண்டு ரவுண்டா அடிக்க ஆரம்பிச்சிட்டாரு. சில வருஷங்களா ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்… ஏன்.. ஏன்..’ என்று இருந்தவர் சமீபத்தில இந்த பழக்கத்தை விட்டு ஒழிச்சுச்சிருக்காரு. அதுக்கு பிறகுதான் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு.  இவரோட படத்தை பார்க்கிறதுக்கு முன்னாலயே நல்ல எதிர்பார்ப்பு மனசுல இருந்துச்சு. ஏற்கனவே படம் பார்த்துவிட்ட நண்பர் ஒருவர் படம் நல்லாயிருக்குன்னு வேற சொல்லிட்டாரா… எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகிப் போச்சு… சரி, மத்தாப்பூவில் தினந்தோறும் நாகராஜ் என்னதான் பண்ணியிருக்காருன்னு பார்ப்போம்…

ஊர்ல ஒரு சின்னப் பிரச்சினையால, சென்னையில இருக்கிற சித்தி வீட்டுக்கு வராரு ஹீரோ. ஒருநாள் காபி சாப்பிட போறப்போ தன்னுடைய பர்ஸை தொலைச்சிடுறாரு. அந்த பர்ஸை கண்டு எடுத்துக் கொடுக்கிறாங்க காயத்ரி. ம்… இந்த நேரத்தில காதல் வந்தாகணுமே… ஆமா… ஹீரோவுக்கு ஹீரோயின் மேல காதல் வருது. ஆனால், காதலைச் சொன்னால் கதாநாயகி ஏற்றுக் கொள்ள மறுக்கிறாங்க… ஏன் காதலை மறுக்கிறாங்க… கடைசியில ஒண்ணு சேர்ந்தாங்களா இல்லையாங்கிறது மீதி கதை.
படம் துவங்கினதில இருந்து சென்னைக்கு ஹீரோ ஜெயன் கிளம்பிப் போகிற வரைக்கும் படம் ரொம்பவே பரபரப்பா நகருது. அதன் பிறகு பரபரப்பு இல்லாவிட்டாலும் ஒரு தெளிவான நீரோட்டம் மாதிரி நகர ஆரம்பிக்கிறது படம். திருச்சியில இருக்கும் ஹீரோ சென்னைக்கு வர வேண்டுமே, அதற்காக நாகராஜ் சொல்லுகிற காரணம் (ப்ளாஷ்பேக்) ‘அட…’ போட வைக்கிறது. அதன் பிறகு வரும் காட்சிகளும் சலிப்பை ஏற்படுத்தாமல் நகருகின்றன. ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்து விடுவார்களா… அடுத்து என்ன நடக்கும் என்னும் எதிர்பார்ப்பு நமக்குள் எட்டிப் பார்த்து மெல்ல மெல்ல அதிகரிக்கிறது. படிக்கும் போது மாணவிகள் மாணவர்களிடம் பழகும் போது பொம்பளைப் புள்ளைங்க கொஞ்சம் உஷாரா இருக்கணும். இல்லையென்றால் இது போன்ற பிரச்சினைகளை கூட சந்திக்க நேரிடலாம். கவனம் தேவை. என்கிற மாதிரியான கருத்தையும் படம் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறது.
ஹீரோவாக நடிச்சிருக்காரு ஜெயன். காயத்ரிக்காக நாயா பேயா இவரு அலைவதும் காத்திருப்பதும் சில நேரங்களில் கலாய்ப்பதுமாக சபாஷ் போட வைக்கிறார். நடிப்பிலும் பாஸ் மார்க் எடுக்கிறார். என்ன நடனம்தான் கொஞ்சம் உதைக்கிறது. ப்ளாஷ்பேக்கை இவருடைய சித்தி சொல்லி முடித்ததும் ஜெயன் அடிக்கிற கமென்ட் இருக்கிறதே… அடேங்கப்பா…
கதாநாயகியாக நடித்திருப்பவர் காயத்ரி. இவருடைய முகம் அக்மார்க் சோகத்தை உருவாகக் கொண்டது என்பதால் இந்தப் படத்திற்கு 100க்கு 200 சதவீதமாக பொருநதியிருக்கிறாரு காயத்ரி. நண்பர்களிடம் நெருங்கிப் பழகிய இவருக்கு ஏற்பட்ட சம்பவம், படிக்கிற மாணவிகளை கொஞ்சம் எச்சரிப்பதாக அமைந்திருக்கிறது. ஜெயனுக்கு சித்தியா வராங்க சித்தாரா. சித்தப்பாவா நடிச்சிருக்காரு நம்ம இளவரசு. அடடே நமக்கு இந்த மாதிரி ஒரு சித்தப்பா, சித்தி இல்லாமப் போயிட்டாங்களேன்னு படத்தை பார்க்கிறவங்க நிச்சயம் ஏங்குவாங்க. அதுவும் சித்தப்பா இளவரசு மகனே மகனேன்னு ஜெயனே கூப்பிடும் போதெல்லாம் அப்படி ஒரு பாசம். காயத்ரியின் அப்பாவா வருகிறாரு கிட்டி. அடடே என்ன ஒரு பாசமான அப்பா. மனதில் நிற்கிறார் கிட்டி.
ஒளிப்பதிவு மாறவர்மன், ஜெயனின் ப்ளாஷ்பேக் காட்சிகள், கோயிலில் ஜெயன் பாடும் பாடல் போன்ற இடங்களில ஒளிப்பதிவு வித்தியாசம் காட்டுகிறது. மற்ற இடங்களில் கேரக்டரை மட்டுமே கேமரா உள்வாங்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது. வேலாயுதம் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கொஞ்சம் பழைய மாதிரி கேட்ட பாடல்கள் போல இருந்தாலும் ரசிக்க வைக்கத் தவறவில்லை. பின்னணி இசை சபேஷ் – முரளி. இரைச்சலில்லாமல் கதைக்கு எனன தேவையோ அதை அளவோடு கொடுத்திருக்கிறார்கள். சபேஷ்… சபாஷ்…
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் தினந்தோறும் நாகராஜ். இவரைப் பற்றி ஏற்கனவே எழுதியாச்சு. குலுங்க வைக்கும் காமெடி, பஞ்ச் டயலாக், அதிர வைக்கும் சண்டைக்காட்சிகள், குலுக்கல் குத்தாட்டம் எதுவும் இல்லாமல் ரசிக்கிற மாதிரியான ஒரு படத்தை எடுத்திருக்கிறார். என்ன படம்தான் கொஞ்சம் நீளம் 2 மணி 40 நிமிடங்கள்.