அமெரிக்காவில் இருந்து ஐ.நா. சபையை மாற்ற வேண்டும். அமெரிக்க மண்ணில் நின்று பொலிவிய ஜனாதிபதி முழக்கம். (வீடியோ)

அமெரிக்காவில் இருந்து ஐ.நா. சபையை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் ஐ.நா. சபையில் பேசினார். மேலும் பேச்சின் போது அமெரிக்காவின் ஏகாதிபத்திய அத்துமீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1945 -ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது முதல் ஐ.நா. சபை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செயல்பட்டு வருகிறது. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக பான் கி மூன் உள்ளார்.இப்போது ஐ.நா. சபையின் 68-வது ஆண்டு பொது சபைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள்.

இதில் பொலிவியா நாட்டு ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் புதன்கிழமை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-உலகில் தீவிரவாதிகளை அமெரிக்கா ஆதரித்து அவர்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் அளித்து வருகிறது. ஊழலையும் அமெரிக்கா ஊக்குவிக்கிறது. ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு அமெரிக்கா உதவவில்லை. மேலும் உலக நாடுகளை அமெரிக்கா மிரட்டியும், அகங்காரத்துடனும் நடந்து கொள்கிறது. மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்வது அமெரிக்காவின் வாடிக்கையாக உள்ளது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்தை சகித்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவிற்கு வருவதற்கான விசாவிற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

அதே போல் அமெரிக்கா வான் எல்லையில் மற்ற நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் உத்தரவாதமும் கிடையாது. அமெரிக்காவின் உளவு மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணத்தால் அமெரிக்காவில் இருப்பதை நான் பாதுகாப்பாக உணரவில்லை.முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தலைவர்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.வில் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும். இது பற்றி நாம் கண்டிப்பாக மிகவும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொராலஸ் இந்த துணிகர பேச்சு ஐ.நா. சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.