அமெரிக்க உளவு நிறுவனங்களுக்குள் ஊடுருவ அல்-காய்தா முயற்சி!


அமெரிக்க உளவு நிறுவனங்களுக்குள் ஊடுருவ அல்-காய்தா போன்ற அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும்,அதைத் தடுப்பதற்காக உளவு நிறுவனங்கள் கோடிக்கணக்கான டாலர்கள் செலவு செய்து வருவதாகவும் சமீபத்தில் வெளியான ரகசிய பட்ஜெட் ஆவணத்திலிருந்து தெரியவந்துள்ளது.



அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் ஒப்பந்த ஊழியர் எட்வர்டு ஸ்னோடென் பல ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். அதில் ஒன்று என்று கூறப்படும் ரகசிய பட்ஜெட் ஆவணத்திலுள்ள விவரங்களை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:



அமெரிக்க உளவு நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பிக்கும் ஐந்து பேரில் ஒருவர் ஏதாவது பயங்கரவாத அமைப்புடனோ, எதிரி நாட்டு உளவு அமைப்புடனோ தொடர்பில் இருப்பதாக சி.ஐ.ஏவுக்கு தெரியவந்ததாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பெரும்பாலும் அல்-காய்தா,ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருந்ததாகக் கூறினாலும், எந்த வகையில் அவர்கள் அந்த அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்று அந்த ஆவணம் குறிப்பிடவில்லை.



இந்த ஊடுருவல் அச்சுறுத்தலை முறியடிக்கவும், முக்கியமான தகவல்கள் எதிரிகளிடம் கசிந்துவிடக் கூடாது என்பதற்காகவும் பல கோடி டாலர்கள் செலவில் பாதுகாப்பு வளையங்களை உளவு அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.