ஈழத்தின் காமராஜர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - றெமின்டன் கல்வி நிலைய பணிப்பாளர் புகழாராம்Srilanka Tamil News





ஈழத்தின் காமராஜராகவும், சிறந்த செயல் வீரராகவும் திகழ்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என றெமின்டன் கல்வி நிலைய பணிப்பாளர் மனோகரன் தெரிவித்துள்ளார். வலி.மேற்கு சுழிபுரம் வழக்கம்பரை அம்மன் ஆலய வளாகத்தில் இன்றைய தினம் (02) இடம்பெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்துரிமைகளையும் எதிர்ப்பு அரசியலின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நன்குணர்ந்து கொண்ட அமைச்சர் அவர்கள், பலவருடங்களுக்கு முன்னர் தனது ஆயுத வழிமுறை போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு இணக்க அரசியலை தேர்ந்தெடுத்தார். அதன்பிரகாரம் யாழ்.மாவட்டம் மட்டுமல்லாது வடபகுதியில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை திறம்பட அமைச்சர் அவர்கள் முன்னெடுத்து வருகின்றார். இந்நிலையில் அரசின் பங்காளிக்கட்சியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து கொண்டு இப்பகுதியின் கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, மின்சாரம், குடிநீர், உள்ளிட்ட மக்களுக்கான பல்வேறு அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட அபிவிருத்திகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, எதிர்காலங்களிலும் முன்னெடுக்கத் தயாராகவுள்ளது. இவ்வாறாக எமது பகுதிகளினதும், மக்களினதும் அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில், மக்களோடு இருந்து மக்கள் பணிசெய்பவர்களுக்கு மக்கள் ஒன்றிணைந்து தமது ஆதரவை நல்க வேண்டும். அப்போதுதான், எமது பகுதிகளின் அபிவிருத்தி மேலோங்கும் அந்தவகையில்தான் ஈழத்தின் காமராஜராக மட்டுமல்லாது சிறந்த செயல் வீரராகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திகழ்ந்து வருகின்றார் என்றும் அவருடைய கட்சி சார்பான வேட்பாளர்களுக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்கும் பட்சத்திலேயே நாம் சுபீட்சமான, வளமான எதிர்காலத்தில் வாழ முடியுமென்றும் சுட்டிக்காட்டினார். இப்பிரசார கூட்டத்தில் ஈ.பி.டி.பியின் சார்பில் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா, வேட்பாளர்களான கந்தசாமி கமலேந்திரன், சுந்தரம் டிவகலாலா, சிவகுரு பாலகிருஸ்ணன், பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (பத்மநாபா அணியின்) செயலாளர் நாயகம் சீறிதரன் ஆகியோர் உரையாற்றிருந்தனர். ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வேட்பாளர்களான கோடீஸ்வரன் றுசாங்கன், திருமதி ஞானசக்தி சீறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குகேந்திரன் (ஜெகன்) ஆகியோர் உடனிருந்தனர். இதேபோன்றதோரு பிரசார கூட்டம் அராலி தெற்கு மாவத்தை விளையாட்டு மைதானத்திலும் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.