உரிய காலத்தில் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த நான், எவ்வாறு ஏகாதிபத்தியவாதியாக இருக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் கேள்வி எழுப்பினார்.
குருநாகலில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 62வது நிறைவு மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, தமது விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துபவரே ஏகாதிபத்தியத் தலைவன்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து வடக்கில் தேர்தல் நடத்தியதுடன், 2005ல் இருந்து இதுவரை 11 தேர்தல்களை நடத்தியிருப்பதாகவும், ஆசியாவிலேயே இந்தளவு தேர்தல் நடத்தப்பட்ட நாடு இலங்கை தான் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 62வது தேசிய மாநாடு நேற்று குருநாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கில் எவரும் வாய்திறக்க முடியாத நிலை இருந்தது. அந்த நிலையை நாமே மாற்றினோம். தற்போது சகலரும் சுதந்திரமாக வாழும் சூழல் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சகல பகுதிகளிலும் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படு த்தப்பட்டு வருகின்றன. ஒருமுறை நாட்டைச் சுற்றிப் பார்ப்பவர்கள் இதனைத் தமது கண்களால் கண்டு உணரமுடியும்.
நாட்டின் சகல மதங்களையும் நாங்கள் சமமாகவே பார்க்கின்றோம். பெளத்த மதம் அரசியலமைப்பில் உள்ளபோதும், ஏனைய சகல மதங்களுக்கும் உரிய இடத்தையும், கெளரவத்தையும் வழங்கி வருகின்றோம்.
சிலர் பொய் பிரசாரங்களைப் பரப்பி வருகின்றனர். நாம் முஸ்லிம் மக்களைப் பகைத்துக் கொள்வதாகவும், கிறிஸ்தவ மக்களைப் புறக்கணிப்பதாகவும் புரளிகள் கிளப்பப்படுகின்றன. மக்கள் இவற்றில் தெளிவுபெற வேண்டும் என்றார் ஜனாதிபதி.
பிரதமர் டி.எம். ஜயரட்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, தினேஷ் குணவர்த்தன உட்பட பெருமளவு அமைச்சர்கள், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அஸ்வர் எம்.பி. உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.