"தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை தாங்கும் முன்னாள் ஈபீடிபியின் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கொள்ளையர் குழுவின் தலைவர் என்பதுடன் அவர் தற்காலிக ஊழியர்களிடம் பண மோசடி செய்துள்ளார்" என தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரதம் தொடர்பில் யாழ். மாநகர சபையில் இன்று புதன்கிழமை (02.10.13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.
மேலும் 'கொள்ளைக்கார குழுத்தலைவரான சுதர்சிங் விஜயகாந் யாழ்.மாநகர சபையின் முன்னாள் பொறியியலாளர் ஒருவரிடமும் சுமார் 29 லட்சம் ரூபா பணத்தினை பெற்று மீள செலுத்தாது மோசடி செய்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைவிட ஒரு சாதாரண நபர்ஆன இவர் தன்னை ஒரு வர்த்தகர் எனக் கூறிக்கொண்டு, தற்காலிக ஊழியர்களிடம் பணம் வசூலித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இவ்வாறான சம்பவங்களை மறைப்பதற்காகவே இந்தப் போராட்டத்திற்கு தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றார் எனக்குறிப்பிட்டதுடன் வாய் மொழிமூலமாக அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையுமில்லை எனக்குறிப்பிட்டார்.
தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் போது உள்ளூராட்சி அமைச்சால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதைற்கு ஏற்ப தகுந்த கல்வித்தகமை எதிர்பார்க்கப்படும் எனவும், எந்தவொரு நியமனங்களும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு அமையவே வழங்கப்படும் எனவும் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா இதன்போது குறிப்பிட்டார்